புதையல் தோண்டியதாகத் தெரிவிக்கப்படும் 4 இராணுவத்தினர் உட்பட 10 பேர் பொலிஸாரால் கைது

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் இறத்தல் காட்டுப் பிரதேசத்தில் புதையல் தோண்டியதாகத் தெரிவிக்கப்படும் 4 இராணுவத்தினர் உட்பட 10 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், புதையலிலிருந்து பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் மாணிக்கக்கற்கள், பளிங்குக்கற்கள் ஆகியனவும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொத்துவில் பொலிஸார் தெரிவிக்கையில்,

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொத்துவில் பாணமை பிரதான வீதியிலிருந்து 8 கிலோமீற்றர் தூரமுடைய இறத்தல் காட்டுப்பகுதியை அண்டிய பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புதையல் தோண்டிக்கொண்டிருந்தவர்களை பொலிஸார் சுற்றிவளைத்தனர். இதன்போது 3 பேரை பொலிஸார் கைதுசெய்த நிலையில் ஏனையவர்கள் தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடியவர்களில் 4 பேர் இராணுவத்தினரெனவும் இவர்களிடம் புதையலிலிருந்து பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் மாணிக்கக்கற்கள் மற்றும் பளிங்குக்கற்கள் இருப்பதாக கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தலைமறைவாகிய 4 இராணுவத்தினர் உட்பட ஏனைய இரு சந்தேக நபர்கள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பிற்பகல் கைதுசெய்யப்பட்டனர். புதையலிலிருந்து பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் மாணிக்கக்கற்கள் மற்றும் பளிங்குக்கற்களும் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பின்னர் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--