மதுரத் தமிழ் பேசும் மட்டக்களப்பு மக்கள்.


இற்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் தமிழகத்தை சேர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. இந்துக்களின் மிகவும் புராதனமான நூலாகிய இரமாயணம், இங்கு அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயமும் அதன் தீர்த்தக்கேணியும் அனுமனால் உருவாக்கப்பட்டது எனக்கூறுகிறது. 'தேன் மதுரத் தழிழ் பேசுகிறார்கள் மட்டக்களப்பார்' என என் நண்பர் ஒருவர்   இந்தியாவில் இருந்து உரையாடியது எனக்கு அப்போது புரிந்திருக்கவில்லை. இப்போது ஏன் அப்படி சொன்னார் என்று பார்க்கும்போது தெழிவாகிறது. 'ஒரு மொழியின் வளர்ச்சி அந்த சமுகத்தின் அந்தஸ்த்தினை உயர்த்துகிறது' என புலவர் மணி உள்ளதும் நல்லதும் எனும் புத்தகத்தில் ஓரிடத்தில் குறிப்பிடுவது உன்மைதான். மட்டக்களப்பில் தழிழ் என்றால் மண் மணக்கும், தேன் இனிக்கும். இது கிராமத்துக்கு கிராமம் பேச்சுவாக்கில் வேறுபட்டு சுவை படுவதனை பட்டி தொட்டிகளை எட்டிப் பார்த்தால் புரியும். இங்கு எமது மக்கள் பேசிச் சுவைக்கும் தமிழ், சங்கம் வளர்த்த மதுரை மக்கள் பேசும் பேச்சு வாடை கொண்டுள்ளது என கூறப்படுகிறது.

இலங்கையில் தமிழர்களின் பேச்சு வழக்குகளாக, யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ், மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ், திருகோணமலை, தென்கிழக்குத் தமிழ் மற்றும் நீர்கொழும்புத் தமிழ் என வேறுபட்டுக் காணப்படுகிறது.

இந்த தமிழ் மொழிப் பயன்பாடுகள் அதன் தோற்றம் வளர்ச்சி இதற்க்கும் மேல் மட்டக்களப்பின் வரலாறுகள், மக்களின் நாளாந்த வழக்காறுகள் தொன்மை பெருமை என்பனவற்றினை 'மட்டக்களப்புத் தமிழகம்' என்னும் நூலில் பண்டிதர் வி. சீ. கந்தையாவால் 1964 ஆம் ஆண்டு எழுதிய நூலும் அதுபோல் எஃப். எக்ஸ். சீ. நடராசா என்பவரால் 1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'மட்டக்களப்பு மான்மியம்' என்பதும் மட்டக்களப்பின் வரலாற்றைக் கூறவென எழுந்த நூல்களாகும்;. இந்நூல் இப்பிரதேசத்தில் உலவிய ஏட்டுப் பிரதிக்ளின் தொகுப்பாக எழுதப்பட்டது. அதே போல் எஸ்.பிரான்சிஸ் 'நூறு வருட மட்டுநகர் நினைவுகள்' எனும் நூலிலும் விரித்துரைத்துள்ளனர்.

குறிப்பாக மட்டக்களப்பு தமிழர் ஏன் இப்படியான சொற்களை பேசுகிறார்கள் என நான் பல்கலைக் கழகத்தில் பயிலும்போது சக மாணவர்களால் கிண்டல் பண்ணப்பட்டு உன்மை தெரியாமல் எம் தமிழை நினைத்து வெட்கித்ததுண்டு. இப்போது அதனை நினைத்து நினைத்து பெருமைப் படுகிறேன். 

ஒரு நண்பர் கூறினார் மட்டக்களப்பில் உள்ளவர்கள் பேசும் போது வேகமாக உரையாடுகின்றனர் என்றும், அவர்கள் பழமை வாய்ந்த இலக்கண கர்த்தாவான தொல்காப்பியர் காலத் தமிழை பேச்சி வழக்காகக் கொண்டதனால் அவர்களுடைய மொழி நன்கு தேய்வடைந்து அது வேகமாகி அதனால் அவர்கள் விரைவாகப் பேசுவது கிலருக்கு விளங்குவதில் சிரமம் உள்ளதாகவும் கூறினார். அதனை நானும் பல இடத்தில் உணர்ந்துள்ளேன். மறுபுறத்தில் யாழ் தமிழ் மக்கள் நன்நூலர் காலத்து தமிழில் வருகின்ற 'கின்று' 'கிறு' 'கொண்டு' என்பன வற்றினை கொண்டு சிறிது மெதுவாகப் பேசிவதனை அவதானிக்கலாம்.

இங்கு வழக்காற்றில் மிகவும் பெருமையாக இப்பொழுதும் பேசப்படும் சில சொற்களையும் அதன் அர்த்தத்தினையும் தெரிந்து கொள்ளலாமே. இங்கு அதிகமாக மறுகா, ஒண்ணா, இஞ்சே, கிறுகி என்பனவற்றை பாவிக்கின்றனர்.
'மறுகா வாறன்' என்று கூறுவர். மறுகால் என்பதை பிரித்தால் மறு+கால் என்று வரும். அதாவது மறு தடைவ என்று பொருள். மறு என்பது இன்னும் ஒரு தடைவை என்பதனைக் குறிக்கும். ஓருக்கால் என்பது ஒரு தடைவ என்பது போல் மறு கால் என்பது பேச்சு வழக்கில் மறுகா என சுருங்கி விட்டது. 

அது போல் 'எனக்கு ஒண்ணா' என்று நாங்கள் பேசுகிறோமே ஒண்ணா என்பதற்கு எதிர்ச் சொல் ஒண்ணும் என்பதாகும். குறிப்பாக சொல்லொண்ணா துயரம் என்பதில் ஒண்ணா என்பது முடியாது என்று பொருள் படுகிறது.

தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, 'இங்கே' என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் 'இங்க' என்றும், திருநெல்வேலி பகுதிகளில் 'இங்கனெ' என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் 'இங்குட்டு' என்றும், யாழ்ப்பாணம் பகுதிகளில் "இங்கை" என்றும், மட்டக்களப்புப் பகுதிகளில் 'இஞ்சே' என்றும் வழங்கப்படுகின்றது. இங்கே(Here) என்பது ஒருவருக்கு அருகை குறிக்கும், அதாவது என்னைப் பாருங்க என்பதற்கு ஜாடையாக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அர்த்தம் பொதிந்த வழக்காறுகள் மதுரைத் தமிழில் உள்ளவாறு பேசப்படுவது புதுமை, பெருமை.

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றச் செயலாளர் த.விமலாநந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ச.இன்பராசன் மற்றும் நான் உட்ப்பட நாட்டுப்புற கலைகளை மட்டக்களப்பு பாசையில் பேசிய ஒலி ஒளி இணைப்பைப் பார்க்க இங்கே சொடுக்குங்கள்.
அதேபோல் எனது நண்பர் ஒருவர் கவியரங்கில் கவிதை ஒன்றை இப்படி மட்டக்களப்பு பேச்சுத் தமிழ் இனிக்க பாடி இருந்தார்.
மல்லிகைப் பூக் கொடுத்து
மாது என் மனங் கெடுத்து
வெள்ளிக் கிழமை விடிய முதல்
விறாந்தையில இருப்பன் என்றாய்
பல்லி கூடச் சொன்னதால 
பரவாயில்லை சம்மதிக்க
பில்லை வைச்சிப் போனவரே
பிறகென்ன தாமதமோ!
இப்படியான மதுரத் தமிழ் இனிக்கும் 'மீன்பாடும் தேனாட்டுக்கு' இந்தப் பெயர் வரக் காரணம் என்ன என்பதை பார்க்காமல் இருக்க முடியவில்லை. கல்லடிப் பாலத்திலிருந்து (லேடி மன்னிங் பாலம்) சப்தமற்ற இரவு நேர முழு மதி தினங்களில் அவதானிக்கும் போது ஓர் இன்னிசை கேட்பதாகக் கூறப்படுகிறது. 
இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசை என நம்பப் படுகின்றது. இதனை இலக்கியங்களில் 'நீரரமகளீர் இசைக்கும் இசை' என வர்ணிக்கப்படுகிறது. ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு 'மீன் பாடும் தேன் நாடு' என பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது.

கத்தோலிக்க குருவான அருட்தந்தை லாங் என்பவர் 'இவ் மீனிசையை' ஒலிப்பதிவு செய்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக 1960களில் ஒலிபரப்பினார் என்று சொல்லப்படுகிறது.

அண்மைய காலங்களில் இவ்விசையை கேட்டதாக தகவல் இல்லை. உள்நாட்டு யுத்தமும் இது பற்றிய ஆர்வமின்மையும் இதற்கான காரணங்கள் எனலாம்.

மீனிசை பற்றி பல கருத்துக்கள் இருந்தபோதிலும் மட்டக்களப்பானது மீன் பாடும் தேன் நாடு என்றே நோக்கப்படுகிறது. பல மட்டக்களப்புசார் அரச திணைக்களங்கள், பாடசாலைகள், கழகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றின் இலச்சினைகள் மீன் அல்லது கடற்கன்னி உருவம் கொண்டதாக காணப்படுவது மட்டக்களப்பிற்கும் 'மீன் பாட்டிற்கும்' உள்ள தொடர்பைக் காட்டுகிறது.

ஆகவே மதிரையில் பொருள் உணர்ந்து பேசும் செந்தமிழ் பேச்சு மொழியை மட்டக்களப்பு தமிழர் பேசுகிறார்களே என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. தமிழ் மொழிப் பேச்சு வழக்கில் இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் தமிழ் வட்டார மொழி வழக்குகள் என அழைக்கப் படுகிறது. மட்டக்களப்பிலும் பல சமுகங்களுக்கென தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன. தற்போது இவ்வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. புதிய வழக்காக, தொலைக் காட்சி முதலான தொடர்புச் சாதனங்களும் இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த தமிழைத் தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன. இருந்தும் இவற்றை பேசுவதில் வெட்கப் படும் மடமையை இன்று தொடக்கம் விட்டெறிவோம். அனைவர்க்கும் இதனை தெரியப்படுத்துங்கள் நண்பர்களே.

 சி.தணிகசீலன்,