கிரானில் யானைகளின் அட்டகாசத்தால் இருவர் உயிரிழப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பல கிராமங்களில் யானைகளின் அட்டகாசம் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்து உள்ளனர். அத்துடன்,  உடைமைகள் சேதமடைந்துள்ளதாகவும் அந்தப் பிரதேச செயலாளர்  கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.

50 க்கும் மேற்பட்ட யானைகள் தமது பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோராவெளி, குடும்பிமலை, பேரில்லாவெளி, வடமுனை, புணானை, வாகனேரி உள்ளிட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் தொடர்ந்தும் மக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்றன. இதனால் 3,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்துக்குள் புணானை மேற்கில் ஒருவரும் குடும்பிமலைப் பிரதேசத்தில் ஒரு சிறுவனும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.


இதேவேளை,  பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கணக்கிடப்படாத சேதங்களும் உள்ளன. அத்துடன், தென்னை, மா உட்பட பயன்தரு மரங்களும் யானைகளால் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினர்.

பிரதேச மக்களின் தகவலின் அடிப்படையில் இந்தப் பிரதேசங்களில் 50 க்கும் மேற்பட்ட யானைகள் உலாவுவதாகத் தெரிகிறது, இந்த விடயம் குறித்து வனவிலங்கு பிரிவினருக்கு அறிவித்தமைக்கு அமையவும் அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியமைக்கு அமையவும் விசேட வனவிலங்கு குழுவொன்று அண்மையில் இங்கு வந்திருந்தனர். தெயட்ட கிருள கண்காட்சியினைத் தொடர்ந்து யானைகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகத் தெரிவித்துள்ளனர் எனவும்  பிரதேச செயலாளர்  கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.