(தீரன்)
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற முதியோர்களுக்கான செயலமர்வு நிகழ்வில் சேவகம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான மறுதாக்கம் குறும்படம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுவைக்கப்பட்டது.
இன்று(13.02.2014) காலை 9.30 மணியளவில் செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ள முதியோர்களுக்கான செயலமர்வில் மேற்படி குறும்படம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி சக்சஸ் விளையாட்டுக்கழகம் சேவகம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த மதனுகண்ணாவின் மறுதாக்கம் குறும்படத்தை சேவகம் நிறுவனத் தலைவரும் பற்றி நியூஸ் நிர்வாக அங்கத்தவருமான திரு.எஸ். நிலாந்தன் அவர்களுடன் படக்குழுவினர்கள் இணைந்து வெளியீட்டு வைக்க அதனை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்கள் பெற்றுக்கொண்டதுடன் இரண்டாவது இருவெட்டினை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்கள் வெளியீட்டு வைக்க அதனை மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
சக்சஸ் விளையாட்டுக்கழகம் சேவகம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த மேற்படி குறும்படத்திற்கு ஊடக அனுசரணையினை பற்றி நியூஸ் இணையத்தளம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வயதான பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடுவதனால் எதிர்காலத்தில் நாம் முதியோராகும் போது எமது பிள்ளைகள் எம்மை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் என்ற செய்தியை தாங்கி மேற்படி குறும்படம் இன்று வெளிவந்துள்ளது.
மிகக் குறைந்த செலவில் எந்தவிதமான நவீன தொழில் நுட்பங்களும் இன்றி எமது பிரதேச கலைஞர்களை வைத்து தயாரிக்கப்பட்ட இக் குறும்படத்தின் வெளியீடு பிரதேச செயலாளர் அவர்களின் உதவியுடன், சேவகம் நிறுவனத்தினால் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏறாவூர் பற்றில் இருந்து வெளிவந்த முதல் குறும்படம் என்றவகையில் எளிமையாக இப் படம் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அது எமது மண்ணின் படைப்பு என்ற வகையில் நாம் அனைவரும் இக் குறும்படக் குழுவினரை பாராட்டி பெருமையடைகின்றோம்.
இப்படம் சமூகத்திற்கு சிறந்த செய்தியை சொல்லியுள்ளது என்பதே உண்மை எதிர்காலத்தில் இதுபோன்ற படைப்புக்கள் மேற்படி படக்குழுவினரால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இக் குறும்படத்தை வெளியிடுவதற்கு அனைத்து வகையிலும் உதவிய ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு. உ.உதயசிறிதர் ஐயா அவர்களுக்கும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
-நிலாந்தன்-