Audio - மண்முனைப்பால திறப்பு விழா நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரை - ஒலிவடிவம்

(ராஜா , சுரேந்திகா ) எந்தவொரு இனத்துக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது என  மட்டக்களப்பு  மண்முனைப்பாலத்தை திறந்து வைத்த பின்; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சனிக்கிழமை (19) தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி

இந்தப்பாலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாலமாகும். இந்த பாலத்தை திறப்பதன் மூலம் ஒரு இனத்திற்கு அநீதி இழைக்கப்படுமென சிலர் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர்.

ஒரு போதும் எந்தவொரு இனத்திற்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது என்பதை நான் இந்த இடத்தில் உத்தரவாதமளிக்கின்றேன். இந்த பாலத்தை திறந்து வைத்ததில் நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த பிரதேச மக்கள் பல வருடங்களாக இங்கு பிரயாணம் செய்வதில் பல கஸ்டங்களை எதிர் நோக்கி வந்தனர். இன்று இப் பாலத்தை திறந்ததன் மூலம் அந்த கஸ்டங்கள் நீங்கியுள்ளன.

கடந்த காலங்களில் பல அரசியல் வாதிகள் இங்கு வந்து வாக்குறுதிகளை தந்தார்கள். ஆனால் அவர்களினால் அது நிறைவேற்றப்படவில்லை. இதனை குறுகிய காலத்துக்குள் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.

ஜப்பானிய ஜெய்க்கா நிதியினூடாக அரசாங்கத்தினால் இந்தப்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கடந்த முப்பது வருடங்களாக நாம் பட்ட துன்பம் போதும்.

இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நல்லிணக்கத்தை கட்டிக்காத்து நாமும் நமது பிள்ளைகளும் சுதந்திரமாக வாழவேண்டும்.
சில வெளிநாட்டு சக்திகள் இங்கு தேசிய ஒற்றுமையை குழப்புவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சில அரசியல் வாதிகளும் பல பொய்ப்பிரச்சாரங்களை மேற் கொள்கின்றனர்.

யார் எதை வேண்டுமானாலும் கூறட்டும். நாம் அபிவிருத்திகளை மேற் கொள்வோம். ஒரு போதும் மக்களை  மறக்க மாட்டோம். நாம் மக்களை கைவிடமாட்டோம்.

எல்லா சமூகத்தினரையும் ஒன்றினைத்துள்ளோம். பிள்ளையான், கருணா அம்மான், ஹிஸ்புல்லா போன்றோர் இன்று சகோதரர்களாக எம்மோடு செயற்படுகின்றனர்.

நான் அண்மையில் அமைச்சர் பஷீரின் மகளின் திருமணத்திற்கு வருகை தந்தேன். இவ்வாறு இணக்கமும் சகோரத்துவமும் இருக்கின்றது.
1970ம் ஆண்டுகளில் மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வழக்குகளுக்காக நான் வரும் போது சில நேரங்களில்  தம்பிமுத்துவின் நூல் நிலையத்திற்கு சென்று சில விடயங்களை அறிந்து கொள்வேன்.

படுவான் கரையும் எழுவான் கரையும் இந்த பாலத்தினூடாக ஒன்றினைக்கப்பட்டுள்ளது. இன்று எல்லோருக்கும் சந்தோசமான நாள். நீண்ட கால கனவு இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது நாம் சொல்வதை செய்வோம், ஒன்றுபட்டால் உண்டு வாழலாம்.

இந்த பாலத்தினால் இந்த பிரதேசமும் முன்னேற்றமடையும் இந்த நாடும் முன்னேறும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.