இந்தியாவில் கபடி பிறிமியர் லீக் போட்டிக்கு மட்டக்களப்பை சேர்ந்த வீரர் தெரிவு

(த.லோகதக்சன்)

இந்தியாவின் மாபெரும் கபடி பிறிமியர் லீக்  போட்டிக்கு இலங்கையை பிரதி நிதித்துவப்படுத்துவதற்காக மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித் தெருவில் இருந்து கணேசராஜா சினோதரன் என்பவர் இந்தியாவில் இடம்பெறும் கபடி பிறிமியர் லீக் போட்டிக்கு தகுதி பெற்று இந்தியா சென்றுள்ளார்.

கிரிக்கட் விளையாட்டில் இந்தியன் பிறிமியர் லீக் போன்று கபடி விளையாட்டில் கபடி பிறிமியர் லீக் போட்டிக்கு இலங்கையில் இருந்து ஒரே ஒரு வீரர் அதுவும் மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித் தெருவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது மண்ணுக்கும், தேசத்திற்கும் கிடைத்த மாபெரும் பெருமை.

மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித் தெருவைப் பிறப்பிடமாகக் கொண்ட வறிய குடும்பத்தைச் சேர்ந்த கணேசராஜா சினோதரன் என்பவர் கபடி விளையாட்டின் மூலம் இலங்கைத் தேசிய அணியில் இடம்பிடித்து தற்போது இந்தியாவில் இடம்பெறும் கபடி பிறிமியர் லீக் போட்டிக்கு தகுதிபெற்ற ஒரே ஒரு இலங்கையர் என்பது எமது நாட்டிற்கு மட்டுநகர் பெற்றுக் கொடுத்த மற்றுமொரு புகழாகும்.

கிரிக்கட் விளையாட்டிற்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கும் எமது நாட்டில் கபடி விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் மாவட்ட, மாகாண ரீதியில் பல சாதனைகளை படைத்து தற்போது இந்நாட்டில் எத்தனையோ வீரர்களுக்கு மத்தியில் இந்தியன் நிறுவனம் ஒன்றினால் பல இலட்சம் பெறுமதியில் கபடி பிறிமியர் லீக் போட்டிக்காக பேங்களுர் புள்ஸ்  அணி சார்பில் இந்தியாவிற்கு செல்வதற்கு இவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது அவரின் விளையாட்டுத் திறனுக்கு கிடைத்த மாபெரும் சன்மானம்.

இவரின் இத்தகைய திறமைக்கு எமது மட்டக்களப்பு மண் தலை வணங்குவதுடன் இவரின் இப்பயணம் வெற்றியுடன் திகழ வேண்டும் என கல்லடித் தெரு நண்பர்களும், மட்டக்களப்பு இளைஞர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.

இவர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.