சவூதியில் காணாமல்போன மட்டக்களப்பை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் சிறையில் தடுத்துவைப்பு

சவூதி அரேபியாவுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு தொழில்வாய்ப்புக்காக சென்று இறுதியாக 2013 டிசம்பர் மாதத்துடன் காணாமல் போனதாக மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்ட மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த சின்னத்தம்பி நவரெட்ணம் ஜெயசீலன் (வயது 28) என்பவர் தற்போது சவூதி அரேபியாவின் ஜித்தாவிலுள்ள சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

மனித அபிவிருத்தி தாபனமும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்தியங்களையும் கடந்த 23.06.2014 இல் செய்த முறைப்பாட்டுக்கமைவாகவே இச்செய்தியை அனுப்பி வைத்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் கே.எம்.பி. றந்தெனிய அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பிரஸ்தாப ஜெயசீலன் தொடர்பான தேடலில் அவர் ஜித்தா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் மேலதிக தகவல்கள் கிடைத்தால் பின்னர் அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வறிப்பையடுத்து மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த சின்னத்தம்பி நவரெட்ணம் ஜெயசீலனின் (வயது 28) மனைவி சுதர்ஷினி ஆறுதலடைந்துள்ளார்.

இது தொடர்பாக மனைவி சுதர்சினி மேலும் தெரிவித்ததாவது

நொச்சிமுனையை சேர்ந்த எனது கணவர் சி.ந. ஜெயசீலன் 2012.03.20 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு தொழில்வாய்ப்புக்காக சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வருடம் வேலை செய்தார். அங்கு சம்பளம் போதாது என்று கருதிய அவர் வேறொரு நிறுவனத்தைத் தேடி அலைந்த போது 2013

.03.19 இல் சவூதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

அவரது நண்பர்களின் தொலைபேசி மூலம் அதனை அறிந்தோம். பின்பு அவர் சிறைச்சாலையிலிருந்து கதைத்தார். இறுதியாக 2013.12.15 ஆம் திகதி தொடர்பு கொண்டார். தன்னுடன் இருந்த பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும் தான் இம்மாதம் இலங்கைக்கு வருவேன் என்றும் கூறினார்.

ஆனால் அவர் வரவும் இல்லை. அவரிடமிருந்து அதன் பிறகு எதுவித தொடர்புமில்லை. அவர் சவூதியிலிருந்து வந்தாரா? இல்லையா என்பது கூட தெரியாமலுள்ளது. எனவே உரியவர்களுடன் தொடர்பு கொண்டு எனது கணவரை மீட்டுத் தாருங்கள் என கோரிக்கை விடுத்தேன்.

மனித அபிவிருத்தி தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி. ஸ்ரீகாந்த் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஆர். மனோகரன் ஆகியோர் இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துடன் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

அதன் பலனாக மேற்படி செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.