வாகரை பிரதேச மாணவர்கள் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

(ரவிக்குமார்) வாகரைப்பிரதேச பால்ச்சேனை அ.த.க பாடசாலை மாணவர்கள் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதை கௌரவிக்கும் நிகழ்வு வாகரை மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் 2014.08.19 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது பிரதேச செயலாளர் எமது பின்தங்கிய வாகரைப் பிரதேசத்திலிருந்து பால்ச்சேனை அ.த.க பாடசாலை மாணவர்கள் அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட (கிழக்கு மாகாண) 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில். பிரபல்யமான  27 பாடசாலைகளுடன் மோதி வெற்றி வாகைசூடி தேசியமட்ட அணிகளுடன் மோதுவதற்கு தகுதி பெற்றுள்ளமையை கௌரவித்து பாராட்டியதோடு, தேசிய மட்ட போட்டியிலும் வெற்றி பெறவேண்டுமென குறிப்பிட்டார்.

இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வகையில் வாழ்வின் எழுற்சி (திவிநெகும) சமூக அபிவிருத்தி பிரிவின்மூலம் மாணவர்களுக்கு  போட்டியில் பங்கு பற்றுவதற்கான ஆளுமையை ஏற்படுத்த மிக பெறுமதியான பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, வாழ்வின் எழுற்சி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.பி.குணரெட்ணம், பிரதேச செயலக உதவிவத்திட்டமிடல் பணிப்பாளர் திரு.வே.நவிரதன், வாழ்வின் எழுற்சி மகாசங்க முகாமைத்துவ பணிப்பாளர் திரு.கே.பற்குணராசா, ஆகியோர் மாணவர்களை பாராட்டிப் பேசினார்கள்.

பிரதேச வாழ்வின் எழுற்சி தலைமை முகாமையாளர் திரு.என்.விஜிதன், வங்கிமுகாமையாளர்கள், பால்ச்சேனை அ.த.க பாடசாலை அதிபர் திரு.பொ.இராமச்சந்திரன், உதவி அதிபர் திரு.த.உதயகுமார், உடற்பயிற்சி ஆசிரியர் திரு.எஸ்.ஜெயமுரளி, வாழ்வின் எழுற்சி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.