இளைஞரை மரத்தில் ஏறி மரம் வெட்ட வைத்த இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மூவர் கைது!

(சித்தாண்டி நித்தி) இளைஞரை மரத்தில் ஏற்றி மரக் கிளைகளை வெட்ட வைத்த இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மூவர் நேற்று புதன் மாலை (27.08.2014) கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவதுளூ
ஏறாவூர் மாவடிவேம்பு பிரதேசத்திலுள்ள காளிகோயில் வீதியில் மின்சார வயர்களுக்குத் தடை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஆல மரம் ஒன்றின் கிளைகளைக் களைவதற்காக மின்சார சபையின் ஊழியர்கள் மூவர் ஸ்தலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் அங்கு ஆலமரத்தின் கீழே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவரை அந்த ஆல மரத்தில் ஏறி கிளைகளைத் களையுமாறு கேட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் கூறியவாறு இளைஞனும் ஆலமரத்தில் ஏறி கிளையொன்றைக் களையும் போது அது முறிந்து அருகிலிருந்த கொங்கிறீற் வீதியில் விழுந்துள்ளது.

அப்பொழுது அந்த இளைஞனும் மரக்கிளையோடு சேர்ந்து பலமாகத் தூக்கி வீசப்பட்டு கொங்கிறீற் வீதியில் தலை அடிபட விழுந்துள்ளான்.
படுகாயமடைந்த இளைஞன் செங்கலடி வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு பின்னர் மேலதிக அவசர சிகிச்சைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முறக்கொட்டான்சேனை, சேர்மன் வீதியைச் சேர்ந்த அஜித் (வயது 19) என்ற இளைஞனே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராகும் என்று பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக இளைஞனின் உறவினர்கள் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் மூவரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகள் தொடர்கின்றன.