முன்னாள் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தி பணமோசடி செய்த இருவருக்கு 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பெயரை பயன்படுத்தி  7 இளைஞர், யுவதிகளிடம்  20 இலட்சம் ரூபாய் மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சந்தேக நபர்களை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை  ஆஜர்படுத்தியபோதே நீதவான் என்.எம்.அப்துல்லாஹ் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பெயரை பயன்படுத்தி போலி ஆவணம் ஒன்றில் அவரது கையொப்பம் போன்று போலி கையொப்பத்தை வைத்து இவ்விருவரும் ஏமாற்றியுள்ளார்.

பணம் கொடுத்து ஏமாறிய இளைஞர், யுவதிகள் இந்த விடயம் தொடர்பில்  முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.  இந்த நிலையில், சிவநேசத்துரை சந்திரகாந்தன்; மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்தே சந்தேகத்தின் பேரில்  இருவரை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (31) கைதுசெய்தனர்.

இந்த பண மோசடிச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்துவரும் மட்டக்களப்பு பொலிஸார், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இன்னும் ஒரு சில சந்தேக நபர்களை கைதுசெய்யவுள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.