இலங்கையை மீண்டும் சுனாமி தாக்கும் - ஆய்வு

மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர்.

இதில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய- ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் சந்திக்கும் சுமத்ரா-அந்தமான் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களால் உருவானவை.

அங்கு படிந்துள்ள மணலை ஆராய்ச்சி செய்த அவர்கள் 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி குறித்து வரலாற்று பதிவுகளை கொண்டு ஆராய்ச்சி செய்தனர். முடிவில், மியான்மரிலிருந்து இந்தோனேசியா வரையிலுள்ள இந்திய பெருங்கடல் எல்லை தட்டுக்களிலேயே அதிக அளவிலான சுனாமி பேரலைகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

100 ஆண்டுகள் முதல் 1000 ஆண்டுகள் இடைவெளிகள் வரை இந்திய பெருங்கடல் பகுதி நிலநடுக்கம் மற்றும் பேரலைகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தட்டுக்கள் தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து அழுத்தம் ஏற்பட்டு வருவதால் சுமத்ராவில் ஏற்பட்டதை போல 9.2 ரிக்டர் அளவு நிலநடுக்கமும், 2004-ல் ஏற்பட்ட சுனாமி பேரலைகளும் மீண்டும் இந்திய பெருங்கடல் பகுதியில் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவித்தனர்.