லயன்ஸ் கழகத்தினால் மீள்புனரமைக்கப்பட்ட பாலர் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது

(உ.உதயகாந்த்)

மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் லயன்ஸ் கழகத்தினரால், கனடிய சிடாஸ் (ChiDAES) நிறுவனத்தின் நிதியுதவியில் கல்லடி, திருச்செந்தூர் பாலர் பாடசாலை புனரமைக்கப்பட்டு கடந்த (30) சனிக்கிழமை காலை லயன்ஸ் கழக  306-C2 மாவட்ட ஆளுநர் லயன் ஈ.டப்ளியு.ஏ.ஹரிச்சந்திரவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட மற்றும் பிராந்திய முக்கிய உறுப்பினர்கள், மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழக உறுப்பினர்கள், பாலர் பாடசாலை ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் மற்றும் அப்பிரதேசத்திற்கான கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வை மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகத் தலைவி திருமதி. ஜெயப்பிரபா சுரேஸ் தலைமைதாங்கி நடாத்தியிருந்ததுடன் தனது தலைமையுரையில் இப்பாடசாலையானது சுனாமியினால் பாதிக்கப்பட்டு இற்றைக்கு 10 வருடங்கள் கழிந்த நிலையிலும் கவனிப்பாரற்ற நிலையிலிருந்ததாகவும், தங்களது கழகமானது இப்பாலர் பாடசாலையை அக்கிராம அபிவிருத்திச்சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க புனரமைத்துத் தர முன்வந்ததாகவும், இதற்கான முழு நிதியுதவியினையும் கனடாவில் வசிக்கும் கிழக்கிலங்கை மக்களை ஒன்றிணைத்த சிடாஸ் (ChiDAES)  நிறுவனம் வழங்கியதாகவும் தெரிவித்ததுடன், சிடாஸ் (ChiDAES) நிறுவனமானது பல வருடங்களாக எமது வறிய சிறார்களது கல்விக்காக பல்வேறுபட்ட உதவிகளைச் செய்து வருவதாகவும், குறிப்பாக சீருடை, புத்தகப் பை, சப்பாத்து போன்றவற்றை வழங்கிக்கொண்டிருந்த நிலையில் தற்போது இப்பாடசாலையின் உட்கட்டுமான வேலைகளை செய்து கொடுப்பதற்கு முன்வந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும் குறிப்பிட்டார்.

அன்றைய நிகழ்வில் அப்பாலர் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டதுடன், பாடசாலை செயற்பாட்டிற்கான அனைத்து கற்கை உபகரணங்களும் பாடசாலை ஆசிரியைகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் அன்றைய நிகழ்வை சிறப்பிக்குமுகமாக பாடசாலை சுற்றுப்புறத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

அங்கு உரையாற்றிய லயன்ஸ் கழக ஆளுநர் லயன் ஈ.டப்ளியு.ஏ.ஹரிச்சந்திர, மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகத்தினரின் சேவையைப் பாராட்டியதுடன், இதுபோன்ற அவர்களது எதிர்கால செயற்பாட்டுகளுக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மற்றும் பெற்றோர்கள் சார்பில் உரையாற்றிய ஒருவர் மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகத்தினருக்கும், குறிப்பாக நிதியுதவி வழங்கியவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.  










பாலர் பாடசாலையின் புனரமைப்பிற்கு முன்னைய நிலை







மீள்புனரமைக்கப்பட்ட பாலர் பாடசாலையின் தோற்றம்