கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாராட்டு விழா

(சித்தாண்டி நித்தி) ஆற்றல் நிகழ்வில் (2014) பங்குபற்றி வெற்றியீட்டி கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பெருமைசேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக பாராட்டு விழா ஒன்று இன்று (18) வியாழக்கிழமை பல்கலைகழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. 

நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா அவர்கள் கலந்துகொண்டதுடன் ஆற்றல் நிகழ்வில் வெற்றியீட்டி கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பெருமைசேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் முகாமாக அவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் இதுபோன்ற நற் பண்புகளையும் சிறந்த ஆளுமை மிக்க மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உருவாகுவதையிட்டு தான் பெருமைகொள்வதாகவும் தெரிவித்ததுடன், வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கிவைத்தார்.

கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி க.இராஜேந்திரம், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி க.பிரேமகுமார் மற்றும் கௌரவ விருந்தினர்களாக விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி பி.சா.ராகல், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அத்துடன் நுண்கலைத்துறை விரிவுரையாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். 

நடைபெற்ற நிகழ்வின்போது அழைப்பு அதிதிகள் வரவேற்கப்பட்டதும் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத்தொடர்ந்து மாணவர்களின் நடனம், பாடல், அதிதிகளின் உரைகளைத்தொடர்ந்து ஆற்றல் நிகழ்வில் ஓவியப்போட்டி, அறிவிப்பாளர் போட்டி, நகைச்சுவைப்போட்டி, மற்றும் பல போட்டிகளில் பங்குபற்றி சாதனைபடைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. 

இவ் ஆற்றல் நிகழ்வானது வருடாந்தம் உயர் கல்வி அமைச்சினால் நடைபெற்றுகின்றது. அந்தவகையில் சென்ற ஆண்டை விட கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து இம்முறை (2014) 150 போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் 65 மேற்பட்ட மாணவர்கள் பல்வேறுபோட்டிகளில் வெற்றியீட்டி கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.