பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு இல்லங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு இல்லம், பகல் நேர சிறுவர் பராமரிப்பு இல்லம் ஆகிய அமைக்கப்படவுள்ளன.  இவற்றின் அடிக்கல் நடும் நிகழ்வு நேற்றைய தினம் (29) காலை அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இத்திட்டம் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பெண்களை வன்முறையிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மட்டக்களப்பு கள்ளியன்காடு பிரதேசத்தில் 10 மில்லியன் ரூபா செலவில் சிறுவர் பராமரிப்பு நிலையமும், சத்துருக்கொண்டான் - கொக்குவில் பிரதேசத்தில் 12.3 மில்லியன் ரூபா செலவில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு இல்லமும் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றன.

இந் நிகழ்வுகளில் அரசாங்க அதிபருடன், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், பொறியியலாளர் ரி.சுமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பெண்களை வன்முறையிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான விசேட 700 மில்லியன் ரூபா  வேலைத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் நாடு பு}ராகவும் மாவட்ட ரீதியில் இவ்வாறான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.