'சவணிக்கை' வாத்தியக் கலைஞர்களுடனான இசை ஆற்றுகை நிகழ்வு


மட்டக்களப்பில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய கிராமிய நரம்பு வாத்தியக் கருவியான சவணிக்கை வாத்தியத்தினை இசைக்கும் பாரம்பரியக் கலைஞரான  நல்லதம்பி வைரமுத்து என்பவருடனும், இவ்வாத்தியக் கருவியினை உருவாக்கும் கலைஞரான பொன்னுச்சாமி சுந்தரமூர்த்தி என்பவருடனும் உரையாடும் நிகழ்ச்சி நுண்கலைத்துறையின் தலைவர் கலாநிதி வ.இன்பமோகன் அவர்களின் தலைமையில் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் இணைப்பாக்கத்தில் இன்று 17ம் திகதி  கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் கலைக்கூடத்தில்நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் நுண்கலைத்துறை விரிவுரையாளர்களும்,மாணவர்களும், நாடகத்துறைசார் ஆர்வலர்களும் பங்குபற்றினார்கள்.

வேடுவ சமூகத்தவர்களின் சடங்குகளிலும், பத்ததிச் சடங்குகளிலும் காவியம்,குளுர்த்திப் பாடல்கள் முதலியவற்றினை பாடும் பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய நரம்பு வாத்தியமான சவணிக்கை உடுக்கிசையும் சிலம்பிசையும் கலந்த இனிய ஓசை வெளிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இவ்விசைக்கருவியானது பலாமரக் குற்றி, தங்கூசி,ஆட்டுத் தோல்,சிறிய சிலம்பு என்பவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு வருவதனையும் அறிய முடிந்தது.

நிகழ்ச்சியில் சவணிக்கை இசை ஆற்றுகையும் கலந்துரையாடலும் சிறப்பாக இடம்பெற்றது. இதில் குறித்த கலைஞர்கள் நுண்கலைத் துறைத் தலைவரால் மாண்பு செய்யப்பட்டார்கள்.