39 ஆம் கிராமப் பாடசாலையில் பரிசளிப்பு விழா


(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தின் எல்லையில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப்பிரிவு பாடசாலையே மட்/மண்டூர் 39 ஆம் கிராமப் பாடசாலையாகும். இப் பாடசாலை போரதீவுப் பற்றுக் கோட்டத்தில் மிகவும் பின்தங்கிய வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களைக் கொண்ட கிராமத்தில் அமைந்துள்ளது. களுவாஞ்சிகுடி நகரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீற்றருக்கு அப்பால் காணப்படுகின்ற இக் கிராமம் அடிக்கடி யானைத் தொல்லைக்கு உட்பட்டு பயத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் பாடசாலை வளவினுள் புகுந்த யானைக் கூட்டம் அங்கு நின்ற மாமரத்தை துவசம் செய்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான ஒரு கிராமத்தில் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட அதிபர், ஆசிரியர்கள் 'பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளை குவியப்படுத்தி கல்வியில் புதிய தடத்தைப் பதிக்க பரிசளிப்பு விழாவொன்றினை நடாத்தியிருந்தனர்.' அதிபர் செ.சபேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். அத்துடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.மு.விமலநாதன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பூ.பாலச்சந்திரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன், ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் திரு.சி.குருபரன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான திரு.க.ஜெயமோகன், திரு.எஸ்.ஜெயவரதராஜன் போன்றோரும் கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.
இவ் விழாவில் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் விசேட நிகழ்வாக இப் பாடசாலையின் அதிபர் அவர்கள் 2014 ஆம் ஆண்டிற்கான குரு பிரதீபா பிரபா விருதினைப் பெற்றமைக்காக கல்விச் சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.