வைத்திய கல்வியினை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.

கிழக்கு பல்கலைக் கழக சுகாதார பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட மாணவர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

வைத்திய கல்வியினை தனியார் மயப்படுத்தும் முகமாக மாலபே கல்வி மையத்தினை இலங்கை வைத்திய சங்கத்துடன் இணைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கமும் இலங்கை வைத்திய சங்கமும் மேற்கொள்வதைக் கண்டித்தே கிழக்கு பல்கலைக் கழக சுகாதார பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட மாணவர்கள் நேற்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கி  மட்டக்களப்பு நகர் வரையில் பேரணி சென்றது.

இதில் விஞ்ஞானங்கள் பீடத்தின் வைத்திய மாணவர்கள் பலர் கலந்து கொண்டதுடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீட மாணவர்களும் ஒத்துழைப்பு வழங்கி அவர்களும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த விஞ்ஞானங்கள் பீடத்தின் மாணவர்கள், கல்வி என்பது எமது நாட்டில் மாத்திரமே இலவசமாக கிடைக்கப்படுகின்ற ஒன்று அதனை தற்போது வியாபாரமாக்குகின்ற நோக்கில் வைத்திய கல்வியினை தனியார் மயப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.


இதன் மூலம் வறிய மாணவர்கள் வைத்தியராகுவதற்குரிய சூழ்நிலை குறைக்கப்படும் பணக்காரர்கள் தகுதி இல்லாதவிடத்தும் பணத்தின் மூலம் வைத்தியராகுவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்.

எனவே இவ்வாறானதொரு திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து அகில இலங்கை வைத்திய பீட மாணவர்கள் செயற்பாட்டுக்குழு நாடளாவிய ரீயில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் ரீதியில் நாமும் இங்கு இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்கின்றோம் என்றனர்.