ஆசிரிய தின விழாவில் முன்னாள் அதிபர் ஆனந்தராஜா கௌரவிப்பு

( ரவிப்ரியா )
பெரியகல்லாறு மத்திய கல்லூரியில் திங்களன்று  மாணவர்களின் ஏற்பாட்டில,; ஏற்பாட்டுக்குழு தலைவர் டிலுக்ஷன் தலைமையில்  நடைபெற்ற ஆசிரிய தின விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் பெரியகல்லாறு மத்தியகல்லூரி ஆகியவற்றின் அதிபரும், மடடக்களப்பு மாவட்ட சாரணிய ஆணையாளருமான ஈ.பி.ஆனந்தராஜா கலந்து கொண்டார்.
பாடசாலை அதிபர் க.நல்லதம்பி, பிரதி அதிபர் வே.மனோகரன் மற்றும் பாடசாலையின் அதிபர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள, மற்றும் மாணவர்கள்; ஆகியோர் கலந்து கொண்டனர். அதிதிகள் வரவேற்கப்பட்டு. மங்கல விளக்கேற்றி, மரபு ரீதியாக நிகழ்வு ஆரம்பமானது. சிறப்பான நடன நிகழ்வுகளும் இடம் பெற்றன. (நடன நிகழ்வு படங்கள் எதிர்வரும் 26.10.2014 கலைக்களம்-3ல் இடம்பெறும்)

ஆசிரியர்களின் குழு பாடலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் மாணவர்கள் சிறப்புரை ஆற்றி, கவிதைபாடி ஆசிரியர்களை குளிர்வித்தனர். மதிய பசியை நடன நிகழ்வுகளால் மசியச் செய்தனர். கல்லூரி முதல்வர் க.நல்லதம்பி தனதுரையில்,

இப் பாடசாலை பட்டிருப்பு கல்வி வலயத்தில் பிரபலியமான பாடசாலை என்பது பலருக்கும் மறந்து போயுள்ளது. அதனால் ஒன்றுகூடல் மண்டபமின்றியே நெடுங்காலமாக (சுமார் 10 வருடங்கள்) நாம் நிகழ்வுகளை இந்தத் தற்காலிக கொட்டிலில் பல்வேறு அளெகரியங்களுக்கு மத்தியில் நடாத்தி வருகின்றோம். தற்போது நிலமை மாறக் கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. 

நாம் வருடாவருடம் ஆசிரிய தினத்தில் முன்பு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கௌரவிப்பது மரபாக இருந்து வருகின்றது. அந்த வகையில் இவ்வருடம் இப்பாடசாலையின் அதிபராக மிகவும் சிறப்பாகச் செயற்பட்ட ஈ.பி.ஆனந்தராஜா அவர்களை கௌரவிக்கின்றோம். அவர் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் கூட மாவட்ட சாரண ஆணையாளராக இருந்து மாவட்ட சாரணிய வளர்ச்சிக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார். எனவே கல்விச் சேவைக்கு ஓய்வு கிடையாது என்பதற்கு முன் உதாரணமாகவும் திகழ்கின்றார் என குறிப்பிட்டார்.

இந் நிகழ்வின் போது கல்லூரியைச் சேர்ந்த 46 ஆசிரியர்களும் கல்விசாரா உத்தியோகத்தர்களும், மாணவர்களால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்படடனர். அத்துடன் ஈ.பி.ஆனந்தராஜா அவர்களின் கழுத்தை மாலைகள் நிறைத்து மாணவர்கள் மகிழ,   கல்லூரி முதல்வர் பொன்னாடை போhத்தி, பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார்.. அதனைத் தொடர்ந்து அவர் தனது ஏற்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
   
நான் இப்பாடசாலையில் தொடர்ச்சியாகப் 10 வருடங்கள் அதிபராகவும், 6 வருடங்கள் ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளேன். எவ்வித அரசியல் பின்புலமுமின்றி பாடசாலையை அபிவிருத்தி செய்தேன். ஆசிரியர்களும் சுதந்திரமாக எவ்வித மனப் பாதிப்பிற்கும் ஆளாகமல் தங்கள்  கருமங்களைத் திறம்பட மேற்கொண்டனர். நியமங்களை வகுத்து இலக்குகளைச் சீராக அடைந்து கொண்டிண்டிருந்தோம். நகரம் நோக்கி பிரபல பாடசாலைகளுக்கு  நகர்ந்த மாணவர்கள் மீண்டும் எமது பாடசாலைக்கு வருகை தந்தார்கள். அந்த அளவிற்கு நிலமையை மாற்றக் கூடியதாக இருந்தது. கல்விச் சமூகம் எமக்கு பூரண ஒத்துழைப்பை நல்கியது.

கடைநிலை மாணவர்களையும் கரை சேர்க்கும் மனோபாவத்துடன் ஆசிரியர்கள் ;செயற்பட வேண்டும். அப்போதான் உண்மையான கல்வி வளர்ச்சி ஏற்படும். அது ஆசிரியர்கள் மனம் வைத்துச் செயற்பட்டால் மட்டுமே முடியும். நான் அதிபராக இருந்து செயற்பட்ட போது கிடைக்காத திருப்தியையும், மகிழ்ச்சியையும் ஆசிரிய சேவையில் இருந்தபோதே பெற்றுக் கொண்டதாக நான் இப்போதும் உணர்கின்றேன். அந்தளவிற்கு மகத்தான சக்தி கொண்டது இச் சேவை. எனவே மீண்டும் இப்பாடசாலை தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் ஆசிரிய தின நிகழ்வுகளில் ஆசிரியர்களே  தங்கள் கலை வெளிப்பாடுகளை செய்து, மாணவர்களை மகிழ்விப்பதே பொருத்தமான செயற்பாடாக அமையும் என்ற தனது அபிப்பிராத்தையும் தெரிவித்தார்.