மட்டக்களப்பு மாவட்டத்தின் கடந்த ஏழு ஆண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள்! ஓர் பார்வை

(எம்.எஸ்.எம்.நூர்தீன் )
மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி மிக துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யுத்தத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டம் என்று மில்லாத வாறு அபிவிருத்தி கண்டு வருகின்றது.


கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல் வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் 70883 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் செயலகம் தெரிவிக்கின்றது.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் வழிகாட்டலிலும் அவரின் நிதியுதவியுடனும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் உற்பத்தி திறன் ஊக்கு விப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத், மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட அரசாங்கத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகளின் வழகாட்டலிலும் நிதியொதுக்கீட்டிலும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்;ஸ் அவர்களின் தலைமையின் கீழ் அவரது சிறந்த ஆலோசனையுடனும் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் நெறிப்படுத்தல் மற்றும் திட்டமிடல் செயற்பாட்டுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி துரிதமாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடனேயே இந்த துரிதமான அபிவிருத்தி நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தின் சகல வளமும் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியில் கடந்த ஏழு ஆண்டு இந்த பெருந்தொகையான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு 6506 மில்லியன் ரூபாவும், 
2009ம் ஆண்டில் 14772 மில்லியன் ரூபாவும், 
2010ம் ஆண்டில் 17049 மில்லியன் ரூபாவும், 
2011ம் ஆண்டில் 7032 மில்லியன் ரூபாவும், 
2012ம் ஆண்டில் 9513 மில்லியன் ரூபாவும், 
2013 ஆண்டில் 8557 மில்லியன் ரூபாவும், 
2014 இவ்வாண்டில் 7506 மில்லியன் ரூபாவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தி திட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பாலங்கள், மற்றும் வீதிகள், விவசாயம், வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், மீன் பிடி, நீர்ப்பாசனம், கால் நடை அபிவிருத்தி, குடி நீர், மின்சாரம், சுற்றுலாத்துறை மற்றும் பொது நிர்வாகம், வாழ்வதாரம் என இவ்வாறு பல துறைகளும் அபிவிருத்தி அடைந்துள்ளன.

வீதி மற்றும் பாலங்கள் அபிவிருத்தி

மட்டக்களப்பு மாவட்டத்தல் கடந்த ஏழு வருடங்களில் அபிவிருத்திக்காக செலவிடப்பட்ட நிதியில் 48 வீதமான நிதி வீதி அபிவிருத்திக்கும் பாலங்கள் நிர்மானத்திற்காகவும் செலவு செய்யப்பட்டுள்ளன.


இதில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஏ தரமுடைய வீதி 138.54 கிலோ மீற்றர் வீதியும், பி தரமுடைய வீதி 12 கிலோ மீற்றரும் நிர்மானிக்கப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் சி.தரமுடைய வீதி 237.2 கிலோமீற்றர் வீதி நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் உள்ளுராட்சி திணைக்களத்தின் மூலம் 1930 கிலோ மீற்றர் வீதி நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் 2317 கிலோ மீற்றர் வீதிக்கட்டமைப்பு நிர்மானிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதிக்கட்டமைப்பு முன்னேற்ற மடைந்துள்ளது.

அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடிப் பாலம், மண்முனைப் பாலம், பனிச்சங்கேனிப்பாலங்கள் உட்பட 13 பெரிய பாலங்கள் வீதி அபிவிருத்தி அதிசார சபையினாலும் 13 சிறிய பாலங்கள் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினாலும் நிர்மானிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் படுவான்கரையும் எழுவான் கரையும் இணைக்கப்பட்டுள்ளதுடன் கிராமத்திற்கும் நகரத்திற்குமிடையில் இலகுவான தொடர்;புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளதுடன் நெல் கொள்வனவும் விவசாயிகளின் வீட்டிலேயே இடம் பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிராமிய மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதுடன் பிரயாணச் செலவு குறைக்கப்பட்டுள்ளதுடன் நேரமும் குறைக்கப்பட்டு வசதி வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

விவசாயம்

நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் முன்னேறியுள்ளது. 2008ம் ஆண்டு 59227 மெற்றிக் தொண் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2103ம் ஆண்டில் 99750 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது.

2008ம் ஆண்டில் சராசரியாக ஒரு ஹெக்டயருக்கு 3.9 வீதமாக மெற்றிக் தொன் உற்பத்தி செய்யப்பட்ட நெல் உற்பத்தி 2013ம் ஆண்டில் 4.9 வீதமாக அதிகரித்துள்ளது.

தேசிய நெல் உற்பத்திக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கடந்த 2008ம் ஆண்டு 3 வீதமாக பங்களிப்புச் செய்யப்பட்டது. ஆனால் அது 2013ம் ஆண்டில் 12 வீதமாக அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்புக்கான காரணம் விவசாய உள்ளீடுகளை மாணியமாக வழங்கியமை, மற்றும் விதை நெல், இலவச பசளை விநியொகம், காசுக்கான வேலைத்திட்டத்தின் மூலம்  வயல் நிலங்களை சமப்படுத்த செய்தமை, விவசாய விரிவாக்கற் சேவை அதிகரித்தமை, புதிய தொழிநுட்ப முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டமை, நீர்ப்பாசனக்குளங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டமை.

8 நெற்களஞ்சிய சாலைகள் தலா இருபது மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டமை, கரடியணாறு விவசாய பன்னை புனரமைக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்தமை  போன்றவைகளை குறிப்பிட முடியும்.

கால் நடை அபிவிருத்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008ம் ஆண்டு 2 மில்லியன் லீற்றர் உற்பத்தியே பெற்றப்பட்டது. ஆனால் இது 2013ம் ஆண்டில் 7.3 மில்லியன் லீற்றராக அதிகரித்துள்ளது.

தேசிய பால் உற்பத்தியில் 2008ம் ஆண்டு 12 வீதமாக இருந்த நிலையில் 2013ம் ஆண்டில் 30வீதமாக அதிகரித்துள்ளது.

பால் சேகரிப்பு நிலையங்கள், மற்றும் பால் பதப்படுத்தல் நிலையங்கள், அமைக்கப்பட்டுள்ளதுடன் புதிய இன பசுமாடுகள் இறக்கு மதி செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் மேய்ச்சல் தரை நிலங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் இன்று பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.

மீன்பிடி
மீன் பிடியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008ம் ஆண்டு 15500 மெற்றிக் தொன் மீன் உற்பத்தி பெறப்பட்டது. இது 2013ம் ஆ;ண்டில் 46000 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது.

இதற்குரிய காரணம் வாழைச்சேனையில் புதிய மீன் பிடி துறை முகத்தை அமைத்தமை, நாவலடியில் மீன் பிடி பயிற்சி நிலையத்தை புனரமைத்தமை, மீன்களை பதப்படுத்தும் 4வாகனங்களை வழங்கியமை, மீன் குஞ்சுகளை விட்டமை, இறால் பன்னைகளை உருவாக்கியமை, மீன் பிடி உபகரணங்ளை மீனவர்களுக்கு வழங்கியமை என குறிப்பிட முடியும்.

2008ம் ஆண்டு 2 வீதமாக தேசிய மீன் உற்பத்தியில் காணப்பட்ட மட்டக்களப்பு மாவட்டம் 2013ம் ஆண்டு 8.7 வீதமாக அதிகரித்துள்ளது.

நீர்ப்பாசனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பாரிய நீர்ப்பாசனக்குளங்களும், 7மத்திய தர நீர்ப்பாசனக்குளங்களும், 268 நீர்ப்பாசனக்குளங்களும் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன.



உன்னிச்சை மற்றும் உறுகாமம் புளுகுனாவ ஆகிய மூன்று பாரிய நீர்ப்பாசனக்குளங்கள் உட்பட இந்தக்குளங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன.

இதில் உன்னிச்சை குளம் புனரமைக்கப்பட்டதன் மூலம் குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

வீடமைப்பு
2008ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 87273 நிரந்தர வீடுகளே இருந்தன தற்போது 110569 நரந்தர வீடுகள் காணப்படுகின்றன. 23323 நிரந்தர வீடுகள் நிர்மானித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

2008ம் ஆண்டு இம் மாவட்டத்தில் 53 வீதமான நிரந்தர வீடுகளே காணப்பட்டன. இது தற்போது 67 வீதமாக அதிகரித்துள்ளன.

கல்வி
மட்டக்களப்பு மாவட்டத்தில் 175 பாடசாலைகள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன. 14 தொழிற் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

154 ஊட்டப்பாடசாலைகளும்,45 தகவல் தொழிநுட்ப கூடங்களும், கணணி ஆய்வு கூடங்களும், 22 மஹிந்தோதய கட்டிடங்களும் நிர்மானிக்கப்பட்டுள்ளன.

இம் மாவட்டத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதரனம், கல்விப் பொதுத்தராதர உயர்தரம் போன்ற பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

சுகாதாரம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார துறை முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இம் மாவட்டத்தில் கடந்த 2008ம் ஆண்டு 17.6 வீதமாக காணப்பட்ட குழந்தை இறப்பு வீதம் 2013ம் ஆண்டில் 11 வீதமாக குறைந்துள்ளது.

2008ம் ஆண்டு 84.5 விதமாக காணப்பட்ட தாய் மரண வீதம் 2013ம் ஆண்டில் 31.6 வீதமாக குறைந்துள்ளது.

2008ம் ஆண்டு 14 வீதமாக காணப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இறப்பு வீதம் 2013ம் ஆண்டில் 12 வீதமாக குறைந்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாதமொன்றுக்கு 305 பெரிய சத்திர சிகிச்சைகளும், 700 சிறியளவிலான சத்திர சிகிச்சைகளும் மேற் கொள்ளப்படுகின்றன.

நிறைகுறைந்த பிள்ளைகள் வீதம் 2008ம் ஆண்டு 14 வீதமாக காணப்பட்ட போதிலும் 2013ம் ஆண்டில் 12 வீதமாக குறைவடைந்துள்ளது.

வீட்டில் குழந்தைகள் பிறக்கும் வீதம் 2008ம் ஆண்டு 3 வீதமாக காணப்பட்ட போதிலும் 0.3 வீதமாக 2013ம் ஆண்டில் குறைவடைந்துள்ளது.

இம் மாவட்டத்தில் கிராமிய 18 சுகாதார நிலையங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியாலைக்கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டதுடன் கிழக்கு பல்கலைக் கழகத்தில் மருத்துவ பீடம் உருவாக்கப்பட்டு வைத்தியர்களும் வெளியேறியுள்ளனர்.

குடிநீர் வழங்கள்-
2008ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 குடிநீர் இணைப்புக்களே இருந்தன. 2013ம் ஆண்டு 29000 குடி நீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் உன்னிச்சைக்குளத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடி நீர் வழங்கப்பட்டுள்ளன.

 
மண்முனை வடக்கு மற்றும், ஆரையம்பதி, காத்தான்குடி, ஏறாவூர், செங்கலடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த குடி நீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

6வீதமாக இருந்த குடி நீர் இணைப்பு தற்போது 52 விதுமாக அதிகரித்.துள்ளது.

சுத்தமான குடி நீரை வழங்கியதன் மூலம் இந்த மாவட்டத்தில் நீரால் பரவும் நோய்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதை குறிப்பிடமுடியும்.

மலசல கூட வசதி
2008ம் ஆண்டு 1023 மலசல கூடங்களே இருந்தன. 2013ம் ஆண்டு 39286 மலசல கூடங்கள் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

மின்சாரம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 661 கிலோ மீற்றருக்கு அதியுயர் மின் வலு பொருத்தப்பட்டுள்ளதுடன் 2302கிலோ மீற்றருக்கு கிராமிய குறைந்த மின் வலு பொருத்தப்பட்டுள்ளன.

552 மின் மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் 123,188 குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள.

இதனால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டு 52 விதமாக இருந்த மின்னினைப்பு தற்போது 82 வீதமாக அதிகரித்துள்ளன.

சுற்றுலாத்துறை

1300 அறைகளைக் கொண்ட இருபது புதிய ஹோட்டல்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளன. இதில் பாசிக்குடாவில் மாத்திரம் 14 ஹோட்டல்களும், ஆறு ஹோட்டல்கள் மட்டக்களப்பிலும் நிர்மானிக்கப்பட்டுள்ளன.


நகரை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு காந்தி பூங்கா மற்றும் லீனிய பூங்கா, நிர்மானிக்கப்பட்டு அழகு படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பிலுள்ள உள்ளுர் விமான நிலையம் அழகு படுதப்பட்டு அதன் ஓடு பாதை புனரமைக்கப்பட்டுள்ளதுடன் பிரயாணிகள் அமர்ந்திருக்க கூடிய கட்டிடங்கள் மற்றும் இளைப்பாறும் மண்டபம் என்பனவும் நிர்மானிக்கப்பட்டுள்ளன.

உள்ளுர் விமான சேவைகள் சிறப்பாக இடம் பெற்று வருவதுடன் கடல் விமான சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால்  உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ளதுடன் உள்ளுர் உற்பத்திக்கும் சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது. அத்தோடு கடற்கரை காணிகளுக்கு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பொது நிர்வாகம்
பொது நிர்வாகத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலகம் மற்றும் வவுணதீவு பிரதேச செயலக கட்டிடங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கான (கச்சேரி) புதிய கட்டிடம் நிர்மானிக்கப்படவுள்ளன.

இதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய அரச விடுதிக்கட்டிடங்கள் மூன்று கட்டிடங்கள் நிர்மானிக்கப்படவுள்ளன.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றம் கண்டுள்ளதுடன் சகல வளமும் கொண்ட இந்த மாவட்டத்தின் எழிலையும், புகழையும் இந்த அபிவிருத்திகள் ஏற்படுத்தியுள்ளன.