மனைவியைக் கொலை செய்ய எத்தனித்து 25 வருடங்களாக தேடப்பட்டு வந்தவர் பைத்தியப் பிச்சைக்காரன் வேடத்தில் கைது.

(சுழற்சி நிருபர்)
மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்திக் காயப்படுத்தி விட்டு பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் 25 வருடங்களாக தலைமறைவாகியிருந்த கணவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 21.11.2014 கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த சீனித்தம்பி மகேஸ்வரி (வயது தற்போது 53) என்பவரை அவரது கணவரான கந்iயா வேலப்பு (தற்போது வயது 67) என்பவர் குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்தி காயப்படுத்திய பின்னர் 25 வருடங்களாக தலைமறைவாகி இருந்துள்ளார்.

இதன் பின்னர் நீதி மன்றம் இவருக்கெதிராக பகிரங்கப் பிடியாணை பிறப்பித்திருந்தது. எனினும் அவர் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று மாலை ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐயன்கேணிக் கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்படும்போது சந்தேக நபர் பைத்திய பிச்சைக்காரன் வேடத்தில் தகர டப்பாக்களைப் பொறுக்கிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார் சந்தேக நபரை நீதி மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் கூறினர்.

25 வருடத் தலைமைறைவு வாழ்க்கை மேற்கொண்ட சந்தேக நபரைத் தேடும் புலனாய்வு முயற்சி ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்கிரம பணிப்புரைக்கமைவாக மேற்கொள்ளப்பட்டப்பட்து

ஏறாவூர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பதில் பொறுப்பதிகாரி ஈ.எல். பதூர்தீன் (63992), ஆர். புருஷோத்தமன் (73595), ஆர்.எம். பண்டிதரெட்ன (55164), டி.ஜி. தர்மசேகர ஆகியோரடங்கிய குழுவினர் இந்த முயற்சியில் ஈடுபட்டு சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

சமீபகாலமாக ஏறாவூர் பொலிஸ் பிரிவின் குற்றப் புலாய்வுப் பொலிஸாரின் முயற்சிகள் தலைமறைவுக் குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் வெற்றியளித்து வருவதாக ஏறாவூர்ப் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜய விக்கிரம தெரிவித்தார்.

கொலை கொள்ளை தீவைப்பு போன்ற நாசகார குற்றச் செயல்களில் ஈடுபட்டு, கடந்த ஒன்பது வருடங்களாக பகிரங்கப் பிடியாணை மூலம் தேடப்பட்டு வந்த நபரை கடந்த 10.11.2014 அன்று ஏறாவூர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளான ஆர். புருஷோத்தமன் 73595, எம்.ஏ.சி தாஹிர் 64931, ஆகியோர் மாம்பழ வியாபாரி வேடத்தில் சென்று அம்பாறை அக்கரைப்பற்றில் வைத்து கைது செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.