செங்கலடியில் மழைவெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி!

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் மழைவெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி, ரமேஸ்புரம், கணபதிப்பிள்ளை கிராமம், பிள்ளையாரடி வட்டாரம், குமாரவேலியார் கிராமம் போன்ற பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலமாக பெய்துவரும் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட மழைவெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் பலரின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
குறித்த பகுதி செங்கலடி நகரை அன்மித்த கிராமங்கள் என்றபடியால் மேற்படி கிராமமக்கள் வழமையாக இடம்பெயர்வதை தவிர்த்து உறவினர் வீடுகளிலேயே தங்கிவிடுகின்றனர். இதனால் குறித்த கிராமங்களை சேர்ந்த மக்கள் நிவாரணங்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியினால் நகநெகும திட்டத்தின் ஊடாக போடப்பட்ட கிரவல் வீதிகள் காரணமாக இம்முறை அதிக வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியினால் மகநெகும திட்டத்தின் ஊடாக போடப்பட்ட கிரவல் வீதிகள் அனைத்தும் வடிகான்கள் எதுவும் இல்லாமல் மிகவும் உயரமாக போடப்பட்டதன் காரணமாக வீதிகளை தாண்டி வடிகான்களுக்கு செல்லும் மழைவெள்ளம் இம்முறை செல்லமுடியாது போனதுடன் நேரடியாக வீடுகளுக்குள்ளேயே தேங்கிநிற்பதால் இதுவரை காலமும் வெள்ளத்தினால் பாதிக்கப்படாத வீடுகள் கூட இம்முறை பதிக்கப்பட்டுள்ளது.
எனவே தேர்தல் காலம் என்றபடியால் கட்டவுட்களுக்கும், சுவரொட்டிகளுக்கும் செலவு செய்யும் பணத்தை சம்மந்தப்பட்ட அரசியல் தலைமைகள் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு உதவிசெய்ய முன்வரவேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.