மட்டக்களப்பில் காணாமல்போன உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

( சிவம் ) காணாமல்போன உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி உறவினர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) நடைபெற்றது.

மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் 1958 முதல் 2005 வரை காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு மைத்திரி- ரணில் அரசுக்கு வேண்டுகோழ் விடுப்பதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கம் காணாமல்போன உறவுகளுடன் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து 2200 முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கடந்த 09.06.2014 வரை 332 பேரிடம் மட்டுமே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சங்கத்தின் தலைவர் ஏ. செல்வேந்திரன் தெரிவித்தார்.

உறவினர்களின் முறைப்பாடுகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு வழங்குவதற்காக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவிடம் சங்கத்தின் தலைவர் கையளித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா துரைரட்ணம், மா. நடராசா, பிரசன்னா இந்திரக்குமார், ஞா. வெள்ளிமைல ஆகியோருக்கும் மகஜர்கள்  உறவினர்கள் கையளிக்கப்பட்டன.