கலாபூசணம் மு. தம்பிப்பிள்ளை எழுதிய 'வெற்றித்திருமகன்', 'மனம்போல வாழ்வு' ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா

(Ravindramoorthy)
'தென்றல்' சஞ்சிகையின் ஏற்பாட்டில் கலாபூசணம் மு.தம்பிப்பிள்ளை எழுதிய 'வெற்றித்திருமகன்' எனும் இலக்கிய நூலினதும் 'மனம்போல வாழ்வு' எனும் சமூக நாடக நூலினதும் வெளியீட்டு விழா இன்று (31.01.2015) களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
கிரான் பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவின் பிரதம அதிதிகளாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், முன்னாள் அரசாங்க அதிபர் புண்ணியமூர்த்தி, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி கு.சுகுணன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் செ. எதிர்மன்னசிங்கம், ஓய்வு பெற்ற உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கலாபூசணம் காசுபதி நடராசா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

'வெற்றித்திருமகன்' நூலுக்கான நூல்நயவுரையினை தொல்பொருளியல் ஆய்வாளர் செல்வி.மு.தங்கேஸ்வரியும், 'மனம்போல வாழ்வு' நூலுக்கான நூல்நயவுரையினை சிறப்புத் தமிழ் விசேட ஆசிரியர் த. சேரலாதனும் வழங்கி வைத்தனர்.
சம்பிரதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி   மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வின் இடைநடுவே நூலாசிரியருக்கான கௌரவிப்புக்களும், அதிதிகளின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.