தமிழர்களுடன் இணங்கிவர மறுக்கும் முஸ்லீம் காங்கிரஸ் - எதிர்க்க தயாராகும் கூட்டமைப்பு!


கடந்த 60 ஆண்டுகளாக தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக போராடிவரும் தமிழ் மக்களுடன் தொடர்ந்தும் இணங்கிச் செயற்படுவதற்கு முஸ்லீம் காங்கிரஸ் தயாராகவில்லை என்பதை கடந்த சில வாரங்களாக கிழக்கு மாகாணசபை விடயத்தில் அக்கட்சியின் தலைமைத்துவங்கள் நடந்துகொண்ட விதம் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ் பேசும் சிறுபான்மை இனங்கள் என்றவகையில் தங்களது மக்கள் சார்ந்து சிந்திப்பது அவர்களது கடமையாக இருந்தாலும் ஒரு சிறுபான்மை இனத்தின் இழப்புக்களின் மீது ஏறி  இன்னுமொரு சிறுபான்மை இனம் சவாரிசெய்ய முயச்சிப்பதானது இந்த நாட்டில் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை வென்றெடுக்கமுடியாத சூழ்நிலைகளையே எதிர்காலத்தில் உருவாக்கப்போகின்றது.

குறிப்பாக காலம் காலமாக அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு சலுகைகளுக்காக அரசியல் செய்துவரும் முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இன்று வரை தங்களது மக்களின் உரிமைகளுக்காக போராடிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாய்ப்புக்களை தட்டிப்பறித்து தமிழ் மக்களுக்கு கிடைக்க கூடிய ஒரு மாகாணசபை அதிகாரத்தை கூட வழங்க மறுப்பதானது இந்த நாட்டிலே தமிழ் பேசும் மக்களுக்காக இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்படுகின்ற ஆகக்குறைந்த அதிகாரமான வடகிழக்கு இணைந்த மாகாணசபை தீர்வை குழப்புவதற்கு துணைபோவதாக அமைந்துவிடும்.

தமிழ் மக்கள் தங்களுக்கான உரிமைகளை பெறமுயற்சித்த அனைத்து விடயங்களிலும் கடந்த பல ஆண்டுகலாக முஸ்லீம் காங்கிரசின் செயற்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளுக்கு எதிரானதாக அமைந்ததுடன் முஸ்லீம் காங்கிரஸ் பல தடவைகள் தமிழ் மக்களுடன் உறவுவைப்பதா? அல்லது சிங்கள தலைமைகளுடன் உறவு வைப்பதா? என்கின்ற சந்தர்ப்பங்கள் வருகின்ற போதெல்லாம் தமிழ் மக்களை புறந்தள்ளி சிங்கள தலமைகளுடன் ஒண்றிணைந்து தங்களை வளர்த்துக்கொண்டுள்ளனர்.

இன்று தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கின்ற சிங்கள தலைமையோன்று தென்னிலங்கையில் உருவாகியுள்ள சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களது மக்களுக்கான ஒரு சிறய உரிமையாக கருதப்படும் மாகாணசபை உரிமையை பெறுவதை முஸ்லீம் காங்கிரஸ் எதிர்ப்பதுடன் அதை ஏனைய சிங்கள உறுப்பினர்களுடன் இணைந்து பெற முனைவதானது  தமிழ் தேசியக் கூட்டமைப்பை முஸ்லீம் காங்கிரசை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது.

கடந்த தடவை கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்கும் விடயத்தில் முஸ்லீம் காங்கிரஸ் விட்ட தவறு குறித்து சுமந்திரன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

"இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டன. 
அந்தத் தேர்தலில் கூட்டமைப்பையும் ஐ.தே.க.வையும் விட மிக மோசமாக அரசாங்கத்தை விமர்சித்த முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. இந்த மூன்று கட்சிகளும் பெற்றுக் கொண்ட ஆசனங்களையும் சேர்த்தால் அரசாங்கத்திற்கு எதிரான ஆசனங்கள்தான் அதிகமாக இருந்தன.

அவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் எம்முடன் இணைந்து ஆட்சியமைக்க வருமாறும் முதலமைச்சர் பதவியைத் தருவதாகவும் நாம் பகிரங்கமாகவே முஸ்லிம் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தோம். முஸ்லிம் சகோதரர் ஒருவரை முதலமைச்சராக நியமியுங்கள் என்று நாம் தெளிவாகவே கூறினோம். 

ஆனால் அந்த அழைப்பை உதாசீனம் செய்து மத்தியில் தமக்கிருந்த அமைச்சுப் பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் பிசகு ஏற்பட்டுவிடாமல் யாருக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்களோ அவர்களோடு சேர்ந்தே ஒரு ஆட்சியை அமைத்தார்கள். கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இருக்கின்ற அந்த அமைச்சரவையில் ஒரு தமிழருக்குக் கூட இடமில்லை. 

 5அமைச்சர்களிலே ஒருவர் கூட தமிழர் இல்லை. சபைத் தலைவரோ பிரதித் தலைவரோ கூட தமிழர் அல்ல. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு இடமில்லையா? கிழக்கில் அரசாங்கம் நிர்வாகம் அமைக்கின்ற போது அங்கே ஒரு தமிழ் மக¬னுக்குக் கூட இடமில்லாமல் ஆட்சி நிறுவப்படுவது நியாயமா?
7 ஆசனங்களைக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸுக்கும் 11 ஆசனங்களைக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் ஏன் ஓர் இணக்கப்பாட்டைக் காண முடியவில்லை? நாங்கள்தான் முதலமைச்சர் பதவியைக் கேட்கவில்லையே? குறைந்த ஆசனங்களைக் கொண்டிருந்த உங்களுக்குத்தான் முதலமைச்சர் பதவியைத் தருவதாக சொன்னோமே. 

அப்படியிருந்தும் அங்கு ஒரு தமிழருக்குக் கூட இடமில்லை என்பதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் ஒரு ஆட்சியை அமைத்தீர்கள். இந்த ஜனாதிபதித் தேர்தலோடு அந்த ஆட்சி முடிவுக்கு வருகிறது.

முஸ்லிம் காங்கிரஸோடு இப்போதும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் உங்களுக்கு சந்தர்ப்பத்தைக்கொடுத்தபோது அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது நீங்கள் விட்ட தவறு என்று சொன்னோம். அவர்களில் சிலர் அதனைத் தவறு என்று ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இன்னொரு தடவை பெருந்தன்மையோடு விட்டுத் தரத்தான் வேண்டும் எனக்கேட்கிறார்கள். 
ஆனால் இன்னொருவரோ அதனைத் தவறு என்று நான் சொல்லமாட்டேன். அது காலத்தின் தேவையாக இருந்தது என்கிறார். என்ன தேவையாக இருந்தது? அமைச்சுப் பதவிதானே தேவையாக இருந்தது. எங்களது உறுப்பினர்கள் எமக்கு அழுத்தங்களைத் தந்தார்கள். வேறு விதமாக கிழக்கில் ஆட்சியை அமைப்போம் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
இன்று கூட அதனைச் செய்யலாம். ஆனால் அதனை நாம் செய்யமாட்டோம்.
முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றவர்களைப் புறந்தள்ளி நாம் ஆட்சிய மைக்கமாட்டோம். ஒரு காலமும் அதனைத் செய்யமாட்டோம்.
எனவே முதலில் நாம் முஸ்லிம் காங்கிரஸுடன் தான் பேசுவோம். அவர்களுடன் இணைந்தே ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுப்போம் என்றே நாம் சொன்னோம். ஆனால் இப்பொழுதும் கூட அவர்கள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தயாரில்லை என்பது புலனாகின்றது. ஏற்கனவே கிழக்கில் இரண்டு வருடம் அமைச்சுப் பதவிகளை முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருந்தது. மத்தியிலும் அமைச்சுப் பதவிகளை வகித்தது. இப்போது புதிய ஆட்சியிலும் அமைச்சுப் பதவிகளைக் கேட்டுக் கேட்டுப் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள்  என்று கூறியுள்ளார்.

இன்நிலையில் ஏற்கனவே மத்திய அரசில் அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம் என கொள்கை ரீதியாக உறுதியெடுத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் ஊடாக வடகிழக்கு மாகாணசபை அதிகாரங்களை பொறுப்பேற்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமையானது. எதிர்காலத்தில் சிறுபான்மையின மக்களின் அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றுக்காக தென்னிலங்கையில் உள்ள மைத்திரி அரசுடன் இணங்கிச் செயற்படுவதற்கான முதல்படியாக அமையலாம் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட போதும் கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு முஸ்லீம் காங்கிரஸ் இணக்கம் தெரிவிக்காமல் போனது தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கான முதல் தடையாக அமைந்துள்ளது.

மத்தியிலும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள முஸ்லீம் தலைமைகள் மகாணத்திலும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு கிடைக்க கூடிய ஒரு அற்ப சொற்ப அதிகாரத்தை கூட கிடைக்கவிடாமல் தடுப்பதானது மிகப்பெரிய வரலாற்றுத் தவறாகும்.

காலம் காலமாக முஸ்லீம் தலைமைகள் வடகிழக்கில் உள்ள சிறுபான்மையின மக்களின் மாட்டு வண்டியை இழுத்துச் செல்வதற்கு பதிலாக தென்னிலங்கையில் இருக்கின்ற ஆட்சி அதிகாரத்தை ஏற்றிச்செல்லும் அடிமை வண்டியையே இழுத்துச் செல்கின்றனர். இதனால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பல இலட்சம் உயிர்களையும், விலைமதிக்க முடியா சொத்துக்களையும் இழந்து இன்றுவரை தமிழ் மக்கள் தங்களது உரிமை என்கின்ற வண்டியை தன்னம் தனியாக உறுதி தளராது இழுத்துக்கொண்டே இருக்கின்றனர்.

இன் நிலையில் தமிழ் மக்களுடன் நின்று மறுபுறத்தில் உரிமைக்கான வண்டியை தள்ளவேண்டிய முஸ்லீம் தலைமைகள் வண்டிச்சக்கரத்தின் அச்சாணியை பிடுங்குவதற்கு முயற்சிப்பது தமிழ் மக்களை மிகுந்த வேதனைகளுக்கு உள்ளாக்கியுள்ளது.

குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக மகிந்தராஜபக்சவை ஆரத்தழுவிக் கொண்டு கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க மறுத்த முஸ்லீம் காங்கிரஸ் இன்று மைத்திரிபாலவின் அரசாங்கம் அமைந்தவுடன் மீண்டும் முஸ்லீம் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும் என்று கோருவது முஸ்லீம் தலைமைகளின் முறையற்ற நியாயப்பாட்டையும் தமிழ் மக்களுடன் அவர்கள் இனியும் இணங்கிச் செல்ல தயாராகவில்லை என்பதையே எடுத்துக்காட்டியுள்ளது.

காலம் காலமாக வடகிழக்கு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சிங்கள தேசத்திற்கு காட்டிக்கொடுத்து அதன் ஊடாக சுகபோகங்களை அனுபவித்து வந்த முஸ்லீம் தலைமைகள் வடகிழக்கில் இருக்கின்ற முஸ்லீம் மக்களை தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தடையாக இருப்பதுடன் வடகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் தென்னிலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் தமக்கு பதவி பட்டங்களை பெற்றுக்கொண்டு தொடர்ந்தும் சுகபோகங்களை அனுபவிக்க முடியாது எனக்கருதும் முஸ்லீம் தலைமைகள் வடகிழக்கு தமிழ் மக்களிடம் இருந்து முஸ்லீம் மக்களை பிரித்துவைப்பதற்கே முயற்சிக்கின்றனர்.

இன்று இலங்கையில் முஸ்லீம்களின் அரசியல் வரலாற்றை மிகக்கேவலமாக மாற்றியுள்ள முஸ்லீம் காங்கிரஸின் அரசியல் செயற்பாடுகள் பதவி பட்டங்களுக்காக எந்தவித கொள்கைகளும் இன்றி மாறி மாறி வரும் அரசாங்கங்களுடன் ஒட்டிக்கொள்கின்ற போக்கானது இலங்கையில் தமிழ் சிங்கள மக்களிடையே முஸ்லீம்களின் அரசியல் குறித்தும் அவர்களது சமூகம் குறித்தும் மிகுந்த விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

மிகமுக்கியமாக அண்மையில் முஸ்லீம் காங்கிரசின் தலைமையை தென்னிலங்கையில் உள்ள ஒரு சிங்கள கட்சியை சேர்ந்த தலைவர் அரசியல் விபச்சாரி என்று விமர்சித்திருந்தார் என்றால் இலங்கையில் உள்ள முஸ்லீம் மக்களின் அரசியல் அடையாளம் என்பது இன்று பலராலும் மிகக்கேவலமாக விமர்சிக்க படுகின்ற ஒன்றாக மாறியுள்ளது.

முஸ்லீம் கட்சிகள் என்றால் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் அவர்கள் காலம் காலமாக இப்படியே வாழ்ந்து பழகிவிட்டார்கள் அவர்களுக்கு உரிமைகளை விட சலுகைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்கின்ற அளவீடு ஒன்றை முஸ்லீம் தலைமைகள் தோற்றுவித்துள்ளன. இதனால் எதிர் காலத்தில் முஸ்லீம் கட்சிகளை ஏனைய பெரும்பான்மை கட்சிகள் குறைத்து மதிப்பிடவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதுடன் முஸ்லீம் கட்சிகளை கணக்கில் எடுத்து செயற்படத் தேவையில்லை என்கின்ற எண்ணப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிங்கள கட்சியொன்றும் இணைந்து ஆட்சியமைப்பதற்கு அமைச்சர் ஒருவர் சம்பந்தன் அவர்களுக்கு அழைப்புவிடுத்திருந்தார் ஆனால் அதனை கூட்டமைப்பு நிராகரித்திருந்தது. காரணம் சிறுபான்மையின மக்கள் வாழும் கிழக்கு மாகாணசபைக்கு சிங்களவர்களை அமைச்சர்களாக வைப்பதற்கு கிழக்கு மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதுடன் அது ஒரு வரலாற்று தவறாக அமைந்துவிடும் என்பதற்காக சம்பந்தன் அவர்கள் அதனை மறுத்திருந்ததாக கூறப்படுகின்றது.

அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எக்காரணம் கொண்டும் கிழக்கு மாகாணத்திற்கு சிங்கள அமைச்சர்களை கொண்டுவரக் கூடாது என்பதில் உறுதியாகவுள்ளதுடன். அதனூடாக தமிழ் மக்களுக்கு எவ்வளவு நன்மை ஏற்பட்டாலும் அப்படிப்பட்ட நன்மைகள் தேவையில்லை என்பதிலும் உறுதியாகவுள்ளார்.

 அதாவது எவ்வாறான சூழ்நிலையிலும் தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் இணைந்து முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டையோ அல்லது முஸ்லீம் கட்சிகளை புறந்தள்ளுகின்ற ஒரு செயற்பாட்டையோ முன்னெடுக்க தயாரில்லை என்கின்ற விடயத்தை மிகத்தெளிவாக கூட்டமைப்பு எடுத்துக்காட்டியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லீம் காங்கிரஸின் தலைமைகள் மட்டும் தமிழ் மக்களின் கருத்துக்களையோ, உணர்வுகளையோ மதிக்காது தான்தோன்றித்தனமாக தங்களது சுயநல அரசியலுக்காக மத்திய அரசுடன் இணைந்து கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அரசியலிலேயே மிகக் கூடுதலாக பங்கெடுத்து வருகின்றனர்.

தொடர்ந்தும் முஸ்லீம் காங்கிரஸ் தமிழ் மக்களுடன் இணங்கிவர மறுப்பதானது வடகிழக்கு தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லீம் தலைமைகளின் வகிபாகத்தை கேள்விக்குறியாக்கும் என்பதுடன் தொடர்ந்தும் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு தீர்வு ஒன்று வருகின்றபோது மட்டும் அதில் முஸ்லீம்களின் ஏகபிரதிநிதிகள் நாங்கள் தான்  என்று கூறிக்கொண்டு கலந்துகொள்வதற்கு அருகதையற்றவர்களாக இருக்கநேரிடும்.

அத்தோடு முஸ்லீம் மக்கள் எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை போன்ற தனித்துவமும், கொள்கையும் கொண்ட ஒரு அரசியல் தலைமையை தெரிவுசெய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. குறிப்பாக சிறுபான்மை இனங்களான தமிழ் முஸ்லீம் மக்களின் உரிமைகள் குறித்தும் அவர்களது அடையாளங்கள் குறித்தும் அக்கறை செலுத்துகின்ற தலைமைகளை தேடவேண்டிய நிலை முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

முஸ்லீம்களின் இன்றைய நிலை தொடருமாக இருந்தால்  எதிர்காலத்தில் முஸ்லீம் சமூகம் தங்களுக்கான தனித்துவத்தையும் உரிமைகளையும் இழந்து ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்ற அரசாங்கங்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகவே வழநேரிடும்.

குறிப்பாக முஸ்லீம் காங்கிரஸினால் முன்னேடுக்கப்பட்டுவரும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் எதிரான போக்கானது தமிழ் தேசியக் கூட்டமைப்பை  முஸ்லீம் காங்கிரசிற்கு எதிராக செயற்படுவதற்கு தூண்டியுள்ளதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்கான நியாயமான உரிமை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு என்று கூறியும் அதனை ஏற்க முஸ்லீம் காங்கிரஸ் மறுப்பதானது தமிழ் மக்கள் மத்தியில் மிகந்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இன்நிலையில் மாகாணசபை தமிழர்களிடம் இருந்து இம்முறையும் பரிபோகுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனியும் முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என்பதோடு எதிர்வரும் காலங்களிலும் முஸ்லீம் காங்கிரசினால் முன்வைக்கபடுகின்ற அனைத்து விடயங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் என்பதே திண்ணம்.

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது அனுப்புவதற்கு
theeran@battinews.com