குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக மாறிவிடுமா? கிழக்கு மாகாண சபையின் ஆட்சி

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட பின்பு தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்ற விடயம் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியே.கிழக்கு  மாகாண  சபை  யாருக்கு? கிழக்கு மாகாண சபையை ஆள்வது யார்? இதுவே தற்போது சிறுபாண்மை மக்களிடம் நிலவிவருகின்ற கேள்வியுமாகும். அண்மையில் மாகாண சபை கூடிய பின்பு சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த அமர்வில் யார் முதலமைச்சர்? முதலமைச்சர் எக்கட்சியை சார்ந்தவர் என்பது தெரியாத புதிராகவே உள்ளது.

ஆரம்பத்தில் கிழக்கு மாகாணசபைத்தேர்தல் முடிவடைந்தவுடன் முஸ்லிம் காங்கிரசை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு அழைத்தது. முதல் அமைச்சர் பதவியை தருகிறோம் என்று கூட கூட்டமைப்பு தெரிவித்தது. ஆனாலும் முஸ்லிம் காங்கிரசோ முன்னைய ஆட்சியாளர்கள் பக்கம் சாய்ந்தது. ஆட்சி அமைத்தது. இன்றைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மத்திய அரசின் அமைச்சுப் பதவி தருகிறோம் என அரசு அழைத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செல்லவில்லை. ஆனாலும் தற்போது கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பு கோருகின்றது.

இதேவேளை முதல் அமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் கேட்கின்றது. யாருக்கு முதல் அமைச்சர். இது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. தனித்தனியே கட்சிகள் கூடிப் பேசின. தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் மூன்றுதடவை உயர் மட்டத்தை சந்தித்துப் பேசியது. ஜனாதிபதியைக் கூட கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ் இவ்விடயம் தொடர்பாக தனியாகச் சந்தித்து பேசியும் இருந்தது.

இந்நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இரு கட்சிகளும் முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லீம் காங்கிரஸ் தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் நீங்கள் ஏறகனவே எங்களை ஆட்சி அமைப்பதற்கு அழைத்தீர்கள் தானே முதல் அமைச்சர் பதவியை தருவதாகவும் கூறினீர்கள் தானே எனகேட்பது சரி.ஆனாலும் அன்றைய சூழ்நிலையும், இன்றைய சூழ்நிலையும் வேறு. அத்துடன் முஸ்லிம் காங்கிரசுக்கு தற்போதைய அமைச்சரவையில் பல அமைச்சுப் பதவிகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் தமிழ் முஸ்லீம் உறவுக்கு நல்ல சமிக்ஞையாக முதல் அமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கலாம்.
ஆனாலும் இரு கட்சிகளும் விடாப் பிடியாக இருந்து ஜனாதிபதி மட்டத்திற்குச் சென்று முதல் அமைச்சர் பதவியை பெறுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன.

எனவே இப்பிரச்சனையை இரு கட்சிகளாலும் தீர்த்து வைக்க முடியவில்லை என்பதையே இச்செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே இதன் பின்பு எவ்வாறு இரு கட்சிகளும் பிட்டும் தேங்காயும் போன்ற உறவு தமிழ் முஸ்லீம் உறவு என மேடைகளில் முழங்கமுடியும். கட்சிகள்தான் பிரிந்திருக்கின்றன. கட்சிகள் தான் விடாப்பிடியாக இருக்கின்றன. ஆனாலும், முஸ்லீம் தமிழ் மக்கள் இவ்விடயத்தில் தெளிவாக உள்ளனர். தீர்ப்பு பொதுமக்கள் கையில் என்றால் அவர்கள் முடிவெடுப்பார்கள். ஆனால் முதலமைச்சருக்கான தீர்ப்பு முஸ்லீம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமிருந்து அரசுபக்கம் சென்றிருக்கின்றன.

இந்நிலையில் யார் முதலமைச்சர்? எதுதான் எப்படியாக இருந்தாலும் இன்னுமொரு முக்கிய விடயத்தையும் சிந்தித்தே ஆக வேண்டும். இதுநாடகமா?அல்லது தற்போதைய அரசியல் சூழலா.  ஏன் என்றால் முதலமைச்சர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கினால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தென்னிலங்கை அரசியலில் இவ்விடயம் தொடர்பாக பேசப்படும் என்பதனால் அரசு அஞ்சுகிறதோ தெரியவில்லை

.தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்தித்தபோது தான்  மாகாண  சபை விடயத்தில்; தலையிடுவதில்லை.இருந்தாலும் நல்ல  முடிவை  எடுக்க நடவடிக்கை எடுப்பேன் என தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்திருந்தார்.அந்த  நல்ல  முடிவு  என்ன?முஸ்லிம் காங்கிரஸ் ,தமிழ் தேசிய  கூட்டமைப்பு ஆகிய  இரு  கட்சிகளும் கிழக்கு  மாகாண சபையின்  முதலமைச்சர் விடயத்தில் நிதானமாக சிந்திக்க  வேண்டும்.இல்லையேல்  இது குரங்கு அப்பம் நிறுத்த கதைபோல் மாறி ஆட்சி வேறு ஒரு கட்சியிடம் செல்லப்போகின்றதா? பொறுத்திருந்து பார்ப்போம்.
-சாமித்தம்பி ரவீந்திரன்