இலட்சியமில்லா வாழ்வு திசையறியாக் கப்பலுக்கு சமன் - த.வசந்தராஜா,

தனிமனிதன் ஒருவனுக்கோ சரி, சமூகம் ஒன்றுக்கோ சரி, இனம் ஒன்றுக்கோ சரி இலட்சியம் ஒன்று வேண்டும். இலட்சியமில்லாத தனிமனிதனதோ, சமூகத்தினதோ அல்லது இனத்தினதோ வாழ்வு திசையறியா கப்பல் போல் ஆகிவிடும்.  

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர் யுவதிகளுக்கான சமூக விழிப்புணர்வுக் கருத்தரங்கின் இரண்டாம் கட்டத்தை இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையின் கேட்போர்கூடத்தில் ஆரம்பித்து வைக்கையில் கிளையின் தலைவர் த.வசந்தராஜா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் நாம் இலட்சியம் ஒன்றை ஆக்கிக் கொள்ள வேண்டும். அதனை அடைந்து விடுவதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளக் கூடாது. எப்போது சந்தேகம் ஏற்படுகிறதோ அக்கணமே நாம் தோற்கடிக்கப்பட்டவர்களாவோம்.  ஆக்கிக் கொண்ட இலட்சியத்தை அடைவது இலகுவான காரியமல்ல. அதனை அடைவதற்கு அல்லும் பகலும் அயராது பாடுபடல் வேண்டும். அப்போதுதான் அதனை அடைய முடியும். எதன் மீது எமக்கு தணியாத தாகம் உண்டோ அதை அடைவதற்கான கதவுகள் என்றோ ஒரு நாள் நிச்சயம் திறக்கப்படும். இளையோர் இந்த உலகினில் பல காரியங்களைச் சாதிக்கவேண்டியவர்கள். மானிட சமூகத்தின் உயர்வுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் உழைக்கவேண்டியவர்கள். அதற்கு இளையோர் தங்களுடைய இயலுமையையும் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். அரச சார்பற்ற அமைப்புக்களும் ஏனைய அமைப்புக்களும் சமூகத்திற்காக ஏற்பாடு செய்கின்ற பயிற்சிகள் கருத்தரங்கங்களில் அவர்கள் நிச்சயம் கலந்து கொள்ளுதல் வேண்டும் என்றார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிகையின் உதவி கிளை நிறைவேற்று உத்தியோகத்தர் திருமதி. பிரஷாந் வேணுஷாவின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிளையின் முதலுதவி இணைப்பாளர் சீனித்தம்பி கஜேந்திரன் சமூகம் ஒன்றிற்கு அவசர நேரம் ஒன்றின்போது தேவைப்படுகின்ற முதலுதவி பற்றி செய்கை முறையின் மூலம் விளக்கமளித்தார்.