முஸ்லிம்களை ஆயுதப் போராட்டத்திலிருந்து திருப்பி அரசியல் அதிகாரத்தைப் பெறும் ஜனநாயகத்துக்கு வழிகாட்டியவர் மாமனிதர் அஷ்ரப்

(சுழற்சி நிருபர் ஹுஸைன்)
முஸ்லிம் இளைஞர்களையும் யுவதிகளையும் உள்ளடக்கிய ஒட்டு மொத்துமான சமூகத்தையும் ஆயுதப் போராட்ட பொறிக்குள் இருந்து காத்து திசை திருப்பியவர்தான் மறைந்த மாமனிதர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரப்.
அதுதான் அவர் சமூகத்துக்குப் பெற்றுக் கொடுத்த முதல் வெற்றி. அது அவ்வாறு நடந்திராமல் இருந்திருந்தால் இன்று முஸ்லிம் சமூகமும் ஆயுதப் போராட்ட மாயைக்குள் அகப்பட்டு சிதைந்து சின்னாபின்னமாகிப் போயிருக்ககும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்ட நஸீர் அஹமட்டிற்கு அவரது சொந்த ஊரான ஏறாவூரில் வெள்ளிக்கிழமை 27.02.2015 மாலை மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
இதன்போது ஏறாவூர் நகர பிதாவாக இருந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினராகப் பதவியேற்றுள்ள அலிஸாஹிர் மௌலானாவும் வரவேற்கப்பட்டார்.

இந்த நிகழ்விற்கு முன்னர் ஏறாவூர் முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜிதில் விசேட பிரார்த்தனை இடம்பெற்ற பின்னர் பள்ளிவாசலிலிருந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆகியோர் புன்னைக்குடாவீதி பொதுக் கூட்ட இடத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

இதன்போது பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரை புறந்தள்ளிவிட்டு இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதை காலம் தற்போது உணர்த்தி நிற்கின்றது.
கிழக்கு மாகாணத்தின் ஒட்டு மொத்தமாhன வரவு செலவுத் திட்டமே 1100 மில்லின் ரூபாய்கள் தான். இது ஒரு சாதாரண சிறிய நிறுவனத்தின் செலவுத் தொகைக்கு ஒப்பானது.
இதனைக் கொண்டு எதனைச் சாதிப்பது என்பதை விட கிழக்கு முதல்வர் என்கின்ற அரசியல் அதிகாரத்கை; கொண்டு சிறுபான்மை இனங்களின் உரிமைகளையும் தனித்துவத்தையும் தற்காத்துக் கொள்வதுதான் இந்த முதலமைச்சர் பதவியிலுள்ள கனதியான விடயம்.
இது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்த வெற்றி என்பதை விடவும் இலங்கை முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றி என்பதே சாலப்பொருத்தம். ஆனால். ஆந்த வெற்றியினூடாக முஸ்லிம்கள் மாத்திரம் நன்மையடையப்போவதில்லை. கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற எல்லா இனத்தவரும் இந்த நன்மைகளை அடைந்து கொள்வார்கள்.

இதற்கு முன்னர் இனப்பிரச்சினைத் தீர்வு  சம்பந்தமாக நடந்த அத்தனை பேச்சுவார்த்தைகளிலும் முஸ்லிம்களையும் ஒரு சமமான சமூகமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நாங்கள் கெஞ்சினோம்.
ஆனால், துரதிருஷ்டவசமாக யாருமே எங்களைக் கணக்கெடுக்கில் எடுக்கவில்லை, உதாசீனம் செய்தார்கள். எங்களை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக தூஷித்தார்கள், முஸ்லிம் சமூகத்தின் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள், உயிர் உடமை அழிவுகளை ஏற்படுத்தினார்கள்.
அப்போது பிரதமராக இருந்தவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்ஹவிடம் நாங்கள் சென்று எங்களது சமூகத்தின் துயரங்களைச் சொன்னபோது வன்னிக்குச் சென்று பிரபாகரனுடன் பேசுங்கள் என்றுதான் அவரும் அப்போது எங்களிடம் சொன்னார்.
அப்படித்தான் ஒரு கையறு நிலையில் முஸ்லிம் சமூகம் அன்று அரசியல் அநாதைகளாகி இருந்தது.
இன்று எங்களுக்கு சம அந்தஸ்துக் கிடைத்திருக்கின்றது. இனப்பிரச்சினைக்கான எந்தத் தீர்வு இந்த நாட்டிலே வரப்போவதாக இருந்தாலும் கடந்த காலத்தைப்போல முஸ்லிம்களைப் புறந்தள்ளி விட்டு எவரும் பேச்சு வார்த்தை நடத்த முடியாது. இதற்கு வித்திட்டவர் மறைந்த தலைவர் அஷ்ரப்தான்.
கிழக்கிலே ஏகமனதான ஆதரவோடு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான கிழக்கு மாகாண சபை கொண்டுவந்த வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் முழு ஆதரவு கிடைத்தது. இது கிழக்கின் இன ஒற்றுமைக்கு கட்டியம் கூறுகின்ற ஒரு சுப நிகழ்வாகும். இதனை வெளிநாட்டு ராஜதந்திரிகளும் பாராட்டி சிலாகித்துப் பேசினார்கள். இங்கிருந்து இன ஒற்றுமை தொடங்க வேண்டும்.
அந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நான் எனது நன்றியறிதல்களை இதயத்திலிருந்து தெரிவித்துக் கொள்கின்றேன்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லிம் சமூகத்திற்கு மாத்தரம் உரியவரல்ல அவர் இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் உரியவர் என்பதை நான் பணிவோடு உங்கள் முன் ஒப்புவிக்கின்றேன்.
தமிழ், சிங்கள சமூகங்கள் எனது வலது இடது கண்களாகும். வலக் கண்ணால் ஒரு பார்வையும் இடக் கண்ணால் வேறொரு காட்சியையும் என்னால் பார்க்க முடியாது என்கின்ற முன்னுதாரணத்தை நான் நிலைநாட்டுவேன்.
கிழக்கு மாகாணத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பல பாரிய சவால்கள் என் முன்னால் உள்ளன.

இரு சமூகக் கசப்புணர்வுகள் தொடர்ந்து செல்வதன் காரணமாக  அடி மட்டத்தில் நல்லெண்ணம் வரவில்லை. அது அரசியல் தலைமைகளிடம் வரவில்லை என்றால் இன்னமும் இந்த நாட்டில் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் இனங்கள் சின்னா பின்னப்பட்டு அழிந்து போகும் போது பேரினவாதம் அதில் குளிர்காய்கின்ற ஒரு துரதிருஷ்டத்தை நாங்கள் ஏற்படுத்தி விடுவோம். இந்த விடயத்திலே அறிவோடு நாம் சிந்திக்கா விட்டால் பேரழிவு நம்மைச் சூழ்ந்திருக்கின்றது என்பதையும் அதற்கு பேரினவாதிகள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் நான் இந்த இடத்தில் பகிரங்கமாக எச்சரிக்கின்றேன்.
முஸ்லிம்களும் தமிழர்களும், அரசியல் தலைமைகளும் அடி மட்ட மக்களும் ஒற்றுமைப்பட வேண்டிய காலகட்டம் இது.
ஓற்றுமைப்பட்டால் பாரிய அபிவிருத்தியை வெகு விரைவில் அடைந்து கொள்ள முடியும்.
எல்லாக் கட்சிகளும் சேர்ந்து கிழக்கின் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்.

வெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப்பெண்கள் பிரச்சினை, வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை. சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம், கிழக்கின் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி, காணிப் பிரச்சினை இவ்வாறு பலவேலைத் திட்டங்களை நாம் செய்தாக வேண்டியுள்ளது.
தமிழர் முஸ்லிம் சிங்களவர் என்று நாம் இனிப் பிரிந்து நிற்க முடியாது. எல்லோரும் இணைந்து ஒரே கொடியின் கீழ் நின்று எல்லாரும் எல்லோரையும் பாதுகாக்கின்ற ஒரு கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும்.
கிழக்கிலே வாழ்கின்ற தமிருக்காக முஸ்லிம்களும் முஸ்லிம்களுக்காக தமிழரும் சிங்களவருக்காக தமிழரும் முஸ்லி;ம்களும் சேர்ந்து குரல் கொடுக்கின்ற ஒரு கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும்.
மட்டக்களப்பை வறுமைக் கோட்டுப் பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும்.
எனது ஆட்சிக் காலத்தில் மூதூர் சம்பூர் மக்கள் தமது பழைய இடங்களில் போய் குடியமர்ந்து அந்த மண்வாசனையில் கால் நீட்டித் தூங்க வேண்டும். அவர்கள் தமது சொந்த இடங்களிலிருந்து அகதிகளாகத் துரத்திப்பட்டிருக்கின்ற நிலைமையை இனியும் நாம் அனுமதிக்க முடியாது.
இந்த இலக்குகளை அடைய இன மத பேதமில்லாது எல்லோரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று உங்களிடம் நான் அறைகூவல் விடுக்கின்றேன்.

13 அரசியல் திருத்தம் கிழக்கு மாகாணத்தில் முழுமையாக அமுல்படுத்தப் படுவதில் நான் குறியாக இருந்து முன்னுதாரணமாக அமுல்படுத்திக் காட்டுவேன். இதற்கு இன ஒற்றுமை முக்கியம். அதற்கு எனக்கு ஆதரவு தாருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்றார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.