ஜனவரி தொடக்கம் இன்று வரை 43 பேர் டெங்கு நோயால் பாதிப்பு - சுகாதார வைத்திய அதிகாரி கூறினார்.

(அபு அலா) அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து  இந்த மாதம் 25 ஆம் திகதிவரை 43 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோய் தொடர்பில்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டல் மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கி அறிவுருத்தல் வழங்கி வீடுகளில் டெங்கு சோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை (26) ஆரம்பிக்கப்பட்டபோதே சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் இதனைக் கூறினார்.

டெங்கு நோய் தொடர்பில் அனைவருக்கும் விழிப்புணர்வுகள்  இருந்தும் கூட அவர்கள் அதனை அலட்சியப்படுத்தி ஒரு பொடுபோக்குத் தனமாக இருந்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்படுகின்றவர்கள் அதிகம் அவர்களே, இந்த டெங்கு நுளம்புத்தாக்கத்தைப் பற்றி அதிக அதிகம் அறிவுருத்தல் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வழங்கிவருகின்ற இதேவேளை அவர்கள் வாழும் வீடு மற்றும் வீட்டுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்ற அறிவுருத்தல்களையும் அரசாங்கம் பல வடிவங்களில் வழங்கி வருகின்றபோதும் அதனை பொதுமக்கள் இன்னும் சரியாக ஏற்று நடப்பதாக தெரியவில்லை.

பல ஆண்டு காலமாக டெங்கு பற்றிய அறிவுருத்தல்களை சுகாதார அமைச்சு சுகாதார பிரிசோகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் மூலம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையிலும் கூட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மிக அதிகமாக டெங்கு தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவு என்றால் அது அட்டாளைச்சேனை 15, 16 ஆம் பிரிவாகும் என்றார்.