யுத்தத்தால் சின்னாபின்னப்பட்ட வாகரையை மீளமைக்க உதவுமாறு இந்தியத் தூதரிடம் வேண்டுகோள்


(ஹுஸைன்)
முப்பது வருட கால யுத்தத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேச மக்களின் வாழ்வைக் கட்டியெழுப்ப உதவுமாறு இந்தியத் தூதர் வை.கே. சிங்ஹா விடம் வேண்கோள் விடுக்கப்பட்டுள்ளது.


வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர். ராகுலநாயகி இந்தியத் தூதரிடம் கையளித்த மகஜரில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
புதனன்று வாகரைக்கு விஜயம் செய்து இந்திய உதவித் திட்டத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை இந்தியத் தூதர் மக்களிடம் கையளித்த சமயத்தில் இந்த வேண்டுகோள் மகஜரை ராகுலநாயகி இந்தியத் தூதரிடம் கையளித்தார்.


அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தமும் இயற்கை அழிவுகளும் வாகரைப் பிரதேச மக்களைத் தாக்கியதால் வறுமையின் பிடிக்குள் அவர்கள் அகப்பட்டுள்ளார்கள்,
யுத்தத்தின் விளைவாக வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கணவனை இழந்தும் வாழ்வாதாரத்தை இழந்தும் நாளாந்த ஜீவனோபாயத்திற்கே அல்லற்படுகின்றார்கள்.

இவர்களுக்கு அவ்வப்போது உதவிகள் வழங்கப்பட்டாலும் நிரந்தர வாழ்வாதாரத்துக்கான உதவியாக ஆடைத் தொழிற்சாலை போன்றவற்றை  வாகரையில் நிறுவினால் விதவைகளின் குடும்பங்களுக்கு வாழ்வளிப்பதாய் அமையும்.

வாகரைப் பிரதேசம் இந்து சமுத்திரத்தால் சூழப்பட்டிருப்பதால் கடல் வளம் நிறைந்து காணப்படுகின்றது.

ஆயினும், இங்குள்ள ஏழை மீனவர்களுக்கு ஒரு மீன்பிடித் துறைமுகம் கூட இல்லை. அதேவேளை உள்ளுரில் ரின் மீன் தொழிற்சாலையை ஆரம்பித்தால் அதிகளவு உள்ளுர் மக்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியும்.

கோடை காலத்தில் நிலத்தடி நீர் வற்றி விடுவதாலும் உப்புக் கரித்த நீர் ஊற்றெடுப்பதாலும் பிரதேச மக்கள் குடி நீருக்கு பெரும் தட்டுப்பாட்டை எதிர் நோக்குகின்றார்கள்.

இதற்காக இந்திய அரசு இந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர் பெற உதவ வேண்டும்.

வாகரைப் பிரதேசம் படிப்பறிவில் பின் தங்கிய பகுதி என்பதால் இந்தப் பிரதேச நிருவாக அலுவல்களைக் கவனிக்க தூரப்புற இடங்களிலிருந்தே நிருவாக அதிகாரிகள் வருகை தருகின்றனர்.

மட்டக்களப்பு நகரின் பல்வேறு இடங்களிலுந்து தினமும் சுமார் 150 கிலோமீற்றருக்கு மேல் பயணம் செய்தே அந்த அலுவலர்கள் வருகின்றார்கள்.
பிரதேச செயலக அரச அதிகாரிகளின் பயணத்துக்கான சிறப்பு ஏற்பாடாக இந்திய அரசு ஒரு பஸ் வண்டியைத் தந்து உதவ வேண்டும் என்று அந்த வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.