மட்டக்களப்பு - கொழும்பு புகையிரத பயணிகள் அதிருப்தி

தமிழ் - சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு கடந்த 10ம் திகதி தொடக்கம் இன்று 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நாடளாவிய ரீதியில் சகல இடங்களுக்கும் விஷேட புகையிரத சேவை நடாத்தப்படுகின்ற போதிலும் மட்டக்களப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மட்டக்களப்பு - கொழும்பு புகையிரத பயணிகள் பெரும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.


புது வருடத்தை முன்னிட்டு மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையே விசேட சேவையை நடத்துவதற்கு புகையிரதப் பெட்டிகள் என்ஜின்கள் பற்றாக்குறை என்று தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மட்டக்களப்பில் இருந்து 8.30 மணிக்கும் கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 7.15 க்கும் புறப்படும் பாடும்மீன் புகையிரதத்தில் 2ம் வகுப்பு பெட்டி ஒவ்வொன்றையாவது மேலதிகமாக இணைக்குமாறு மட்டக்களப்பு பிரதம புகையிரத நிலைய அதிபர் ஏ.எல்.எம். அலிபர் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு அமைய 10ம் திகதி தொடக்கம் 19ம் திகதி இன்று வரை 2 ம் வகுப்பு பெட்டிகள் 2 இணைக்கப்படும் என்று புகையிரத பகுதி பிரதி இயக்க அத்தியட்சர் பொல்வத்தகே எழுத்து மூலம் அறிவித்திருந்தார். எனினும் பெட்டிகள் இணைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் இட நெருக்கடியினை எதிர்நோக்கினர்.

விசேட புகையிரத சேவையை நடத்தாது ஒரு புறம் இருக்க ஒரு பெட்டியை கூட மேலதிகமாக இணைக்க முடியாமல் போனது குறித்து பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். வருடா வருடம் புத்தாண்டு தினத்தில் இந்த நிலைமை தொடர்ந்தும் இருந்து வருவதாகவும் பயணிகள் அதிருப்தி வெளியிட்டனர்.