தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிக்க மைத்திரி ஆட்சியில் இடமளிக்கலாகாது - எம்.இராஜேஸ்வரன்

அம்பாறை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் கபளீகரம் செய்யும் முயற்சியினை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டது. அவ்வேளையில் எமது மக்களை அணி திரட்டி இதனை தடுத்து நிறுத்தினோம். இவ்வாறான நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி யுகத்தில் இடம்பெறக் கூடாதென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ
ம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம், சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் என்பவற்றின் பொருளாளரான க.கனகராஜா அன்பளிப்பு செய்த நிகழ்வு புத்தாண்டையொட்டி வளத்தாப்பிட்டியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த எம்.இராஜேஸ்வரன் அங்கு மேலும் பேசுகையில் வளத்தாப்பிட்டி கிராமத்தை அண்மித்துள்ள பழவெளியில் எமது மக்களின் காணிகளை அபகரிக்கும் வகையிலும் சங்கமண் கண்டியிலுள்ள காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளும் மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் தலைதூக்கியதை மறந்துவிடலாகாது. இவற்றுக்கு அப்பால் தீராத வடுவை உண்டு பண்ணிய இன அழிப்பை மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மேற்கொண்டனர். இவற்றை இல்லாமல் செய்யவே எமது மக்கள் ஜனாதிபதி தேர்தலின் போது பதிலடி கொடுத்தனர். 

அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்பது இந்த ஆட்சிமாற்றம் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அரசியல் செய்பவர்கள் யாராயினும் உணர்ந்து கொள்வது அவசியமாகும். எம்மிடம் அரசியல் அதிகாரம் உள்ளதென்பதால் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுதல், அதிகார மோகத்தில் பயணித்தல் என்பதற்கான படுகுழி வெட்டப்பட்டு இறைதீர்ப்பு கிட்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் பலவகையான நெருக்குவாதங்களுக்கு முகங்கொடுத்த எமது வளத்தாப்பிட்டி மக்கள் தமிழ்தேசியத்தின் மீது பற்றுறுதியாக உள்ளமை மகிழ்ச்சி தரும் விடயமாகும். கல்வி சரிவந்தால் யாவும் சரியாகிவிடும் என்பார்கள். இந்த உண்மையை வளத்தாப்பிட்டி மக்கள் உணர்ந்து இப்பாடசாலையை முன்னேற்ற வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் சிறக்கவேண்டும் என்று தியாக சிந்தனையுடன் பணியாற்றும் அதிபர் பொன்.கமலநாதன் ஆசிரிய குழாத்துடன் இணைந்து பெற்றோர் பயணித்தால் சாதகமான முடிவுகள் எமது காலடிக்கு வரும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தரம் 9 உடன் இயங்கும் இப்பாடசாலையை சாதாரணதர வகுப்பு வரை இயங்கவைக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன் என்றார்.

அந்நிகழ்வில் உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.இலங்கநாதன், நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலய பரிபாலன சபைத்தலைவர் கே.லவகுமார், அதிபர் பொன்.கமலநாதன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.