காணாமல் போனவரின் சடலத்தை நெருங்குவதில் முதலைகள் குறுக்கீடு ! ஆபத்தின் மத்தியில் சடலம் மீட்பு

(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் வரும் சந்தனமடு ஆற்றுப் பகுதியில் (சந்தனமடு ஆற்றின் மறுபகுதி கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குள் வருகிறது) சடலம் ஒன்றைத் தாம் திங்கள் இரவு 9 மணியளவில் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் மற்றும் ஏறாவூர் பொலிஸ் சார்ஜன்ற் ஏ.இஷற். ஹஸன் தலைமையிலான சடலம் மீட்பு பொலிஸ் அணியினர் இரவு எட்டு மணியளவில் சந்தனமடு ஆற்றின் கரையை அடைந்ததாகத் தெரிவித்தனர்.


குறித்த ஆற்றுப் பகுதியில் நான்கு, அல்லது ஐந்து முதலைகள் தொடர்ந்து நடமாடிக் கொண்டிருந்த வேளையிலேயே தாம் சடலத்தை மீட்;டதாக மரண விசாரணை அதிகாரி நஸீர் தெரிவித்தார்.
சந்தனமடு ஆற்றைக் கடப்பதற்காகச் சென்ற வந்தாறுமூலை பேக் ஹவுஸ் வீதி பலாச்சோலையைச் சேர்ந்த கந்தையா பத்மநாதன் (வயது 55) என்பவர் கடந்த 14.05.2015 அன்று காணாமல் போயிருந்தார்.
இது தொடர்பாக உறவினர்கள் கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு செயதிருந்தனர்.
தேடுதல் நடவடிக்கை உறவினர்களாலும் ஊர்மக்களாலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போதும் சடலத்தை உடனடியாகக் கண்டு பிடிக்க முடியாமற் போனது.
எனினும், திங்கள் (18.05.2015) மாலை சடலம் மிதப்பதாக அதனைக் கண்ணுற்றோர் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
அதேவேளை அந்த சடலம் மிதக்கும் ஆற்றுப் பகுதியில் 4 இற்கும் மேற்பட்ட முதலைகள் நீந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை வந்தாறுமூலைக்கு வந்து உறவினர்களிடம் 17 ஆயிரம் ரூபாய் பணத்தைப்  பெற்றுக் கொண்டு  இவரும் இவருடன் வேறு இரு நண்பர்களும் ஆற்றின் மறுகரையைக் கடப்பதற்குச் சென்றபோது வழமையாக ஆற்றைக் கடப்பதற்கு பயன்படுத்தப்படும் தோணி மறுகரைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
மாலை 6 மணிக்குப் பின்னர் இந்த ஆற்றுப் பகுதியில் தோணிப் போக்குவரத்து நிறுத்தப்படுவதுண்டு.
எனினும், பத்மநாபதன் மறு கரையிலுள்ள தோணியை ஆற்றை நீந்திக் கடந்து சென்று எடுத்துக் கொண்டு வந்து நண்பர்களையும் ஏற்றிச் செல்லலாம் என்ற நோக்கில் ஆற்றில் கால் வைத்த பொழுது அவரை முதலை கௌவியுள்ளது.
அத்தோடு அவர் காணாமல் போயுள்ளார். அவரது சடலமே திங்கள் இரவு மீட்கப்பட்டது.
கரடியனாறு வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி கே. சுகுமார் முன்னிலையில் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் பிரேதப் பரிசோதனையை நடத்திய பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த 4 மாதகாலப் பகுதிக்குள் சந்தனமடு ஆற்றில் மூழ்கி மூவர் இறந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.