தமிழில் தேசிய கீதம் தாக்குதல் விவகாரம் தொடர்பில் சிங்கள மாணவர்கள் ஐவர் கைது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியின் இறுதி நிகழ்வில் தமிழில் தேசியகீதம் பாடப்பட்டமையால், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐவர்  தலா ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான  சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.

அத்துடன், எதிர்வரும் ஜுன் மாதம்  23ஆம் திகதிக்கு   வழக்கு திகதியும் குறிக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகஸ்தரான  பத்தக்குட்டி சுமன் தாக்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில்  ஐவர் கைது செய்யப்பட்டு அவர்களில் இருவர் அடையாளம் காட்டப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.



இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார் மேற்படி சந்தேக நபர்களை கைதுசெய்து நேற்று  வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. இதன்போது,  இரண்டு பெரும்பான்மையின  மாணவர்கள்  அடையாளம் காட்டப்பட்டனர். சந்தேக நபர்கள் சார்பில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான எம்.ஐ. உவைஸுர் றஹ்மான் ஆஜரானார்.

சந்தேக நபர்கள் முகாமைத்துவப்பீட இறுதியாண்டு மாணவர்கள் என்பதனால், அவர்களை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணி நீதிபதியை கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து, ஜுன் 23ஆம் திகதிக்கு  வழக்கு திகதி குறிக்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் ஐவரும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளில்  விடுவிக்கப்பட்டனர்.

கண்காட்சியின் இறுதி நிகழ்வில் தமிழில் தேசியகீதம் ஒலிபரப்பப்பட்டதாகவும் இதன்போது, பெரும்பான்மையின  மாணவர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், மீண்டும் சிங்களத்தில் தேசியகீதம் ஒலிபரப்பட்ட நிலையில் திடீரென பெரும்பான்மையின  மாணவர்கள் சிலர் தன்னை தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவரான சுமன் பொலிஸாரிடம் முறைப்பாடு  செய்திருந்தார். தாக்குதலுக்குள்ளான அலுவலர் படுகாயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.