175 கிலோகிராம் மான் மற்றும் மரை இறைச்சி கைப்பற்றப்பட்டதோடு 4 நபர்களும் கைது!

ஏறாவூர் தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டிடத் தொகுதியில் சுமார் 175 கிலோகிராமுக்கு மேல் பொதி செய்யப்பட்டும் பொதி செய்வதற்குத் தயாரான நிலையிலும் குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த மான் மற்றும் மரை இறைச்சியை சனிக்கிழமை இரவு தாம் கைப்பற்றியதாக மட்டக்களப்பு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள சுற்று வட்ட அதிகாரி என். சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இதனுடன் மான் இறைச்சியை மேற்படி கட்டிடத் தொகுதியில் வைத்து வெட்டி, துப்புரவு செய்து பொதியிடலில் ஈடுபட்டிருந்த 4 நபர்களையும் தாம் கைது செய்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து தாம் இந்தக் கட்டிடத் தொகுதியைச் சுற்றி வளைத்தபோது மான் இறைச்சியை பொதியிட்டுக் கொண்டிருந்த நபர்களைக் கைது செய்ததோடு மான் மற்றும் மரை இறைச்சியையும் கைப்பற்றயதாகவும் அவர் மேலும் சொன்னார்.
பொதியிடப்பட்ட இந்த இறைச்சிப் பக்கெற்களில் இலங்கையின் பிரபல இறைச்சிக் கம்பனி ஒன்றின் லேபல் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள சுற்று வட்ட உதவி அதிகாரி அஜந்த பிரியந்த உட்பட வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள பாதுகாப்பு உத்தியோகத்தர்களான பி.எச். ஜெகத், ஈ. லிலக்ஷன், வி. சந்மிலகாந்த், வி. சுகிர்தராஜ், வி.ரி. மோஜஷ்தயான், ரீ.டபிள்யூ.எம். திலக்சென ஆகியோரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இறைச்சிக்காக வேட்டையாடப்பட்ட மான்களும் மரைகளும் மட்டக்களப்பு மற்றும் பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள தொப்பிகல (குடும்பிமலை) மலைப்பகுதிக் காடுகளில் இருந்து வேட்டையாடப்பட்டதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கின்றது.