பிள்ளையானை தடுத்து வைத்திருப்பது எமக்கு சேறுபூசும் செயலாகும் கட்சியின் செயலாளர் பி; பிரசாந்தன்


 (சிவம்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குற்றப்புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றாரே தவிர கைது செய்யப்படவில்லை என அக் கட்சியின் செயலாளர் பி. பிரசாந்தன் தெரிவித்தார்.

இதுபற்றி பத்திரிகையாளருகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று திங்கட்கிழமை (12) மாலை மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் பிரதித் தலைவர் எஸ். யோகவேள், பொருளாhளர் தேவராஜன், பிரதிச் செயலாளர் ஆபிரகாம் ஜோர்ஜ்பிள்ளை, மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி மனோகர் ஆகியொர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் கூறுகையில்

புலனாய்வுப் பிரிவினரின் வாழைச்சேனையில் உள்ள தலைவரின் வீட்டிற்கு புலனாய்வுப் பிரிவினர் சென்றபோது அவர் அங்கு இருக்கவில்லை. அவரது தாயாரும் சகோதரியுமே இருந்துள்ளனர். அவர்கள் தலைவருக்கு தெரியப்படத்தியதற்கு இணங்க புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்காக சென்றபோதே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் ரவிராஜ் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும். அதற்கு எமது கட்சியும் ஆதரவாக இருக்கின்றது ஆனால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ்லி இராசநாயகம், தங்கத்துரை, நிமலன் சவுந்தரநாயகம் உள்ளிட்டோரின் விசாரணைகள் கிடப்பில் உள்ள நிலையில் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் ரவிராஜ் விசாரணைகள் மட்டும் ஏன் இடம்பெறுகின்றது என்ற கேள்வி எழுகின்றது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதற்கும் பிள்ளையானை வீடு தேடிவந்து கைதுசெய்ய முற்பட்ட முறைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இது எமது கட்சி மற்றும் தலைவர் மீது சேறுபூசும் நடவடிக்கையாகும். இது எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் எமது வாக்கு வங்கிளை குறைக்கும் நடவடிக்கையாகும்.
ஜனாதிபதி மைத்திபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சியில் எமது தலைவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. இன்று செவ்வாய்க்கிழமை (13) நீதி மன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார் எந்தவித குற்றமற்ற எமது தலைவர் நிரபராதியாக வெளிவருவார் எனத் தெரிவித்தார்.