இலங்கைவாழ் காப்பிரிச் சமூகத்தினரது வாழ்க்கைமுறை: நேர்காணலில் கிடைத்த மறக்க முடியாத அனுபவங்கள்

காலனியத்தின் உயர்மிகு சொத்துக்களாக இலங்கையில் இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கும் காப்பிரிச் சமூகம் தொடர்பான தேடுதலின் அடிப்படையில் திருகோணமலை மற்றும் புத்தளம் போன்ற மாவட்டங்களில் அச்சமூகத்தினர் பலரை என்னால் சந்திக்க முடிந்தது. அப்பொழுது அவர்களிடம் அச்சமூகத்தவர் தொடர்பான பூர்வீகம் பற்றிக் கேட்டபோது அவர்கள் தங்களது பூர்வீகம் தொடர்பாகவும் இன்று அவர்கள் வாழும் நிலை தொடர்பாகவும் தமது பாரம்பரியங்கள் தம்மை விட்டுச் செல்வது தொடர்பாகவும் அவை தங்களுக்கு எந்தளவிற்கு முக்கியம் வாய்ந்தவை என்றும் அவை மீண்டும் வருவது தொடர்பான தமது விருப்பம் என்ன எனவும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக என்னுடன் உரையாடினர்.

திருமலை பாலையூற்றுக் காப்பிரி சமூகத்தினருடன் உரையாடியபோது அங்குள்ள காப்பிரி சமூகத்தின் மூத்த குடிமகனான 90 வயதை எட்டிய திரு அல்போன்சோ அவர்கள் 'என்னுடைய சமூகத்தினர் தற்போது பாலையூற்றிலுள்ள ஏனைய மக்களுடன் சந்தோசமாக வாழ்கின்றார்கள். அவர்களிடம் நான் எங்களது பூர்வீகம் தொடர்பான எந்தவித வேண்டுகோளையும் முன்வைக்கவில்லை. ஆரம்ப காலத்தில் எமது மூதாதையர்கள் காப்பிரி சமூகத்திற்கே உரித்தான அனைத்து விடயங்களையும் பின்பற்றியதாக எனது தாத்தா கூறக் கேட்டேன். அத்தோடு எனது வருங்கால சந்ததியினரின் நலன் கருதி பாலையூற்றுச் சமூகத்துடன் எந்த விதத்திலும் வேறுபாடான பண்பாடுகளை நடைமுறைப்படுத்த நான் விரும்பவில்லை' என தனது கருத்தை எவ்வித தயக்கமுமின்றி முன்வைத்தார்.

ஆனால் அவருடைய மகனான அல்போன்சோ எதிரின்ஸ் பயர்ஸ் என்பவர் பாலையூற்றுப் பிரதேசத்திலே வசித்து வருகின்றார். அவர் தன்னுடைய கருத்தைக் கூறும்போது 'நான் எமது பூர்வீக பண்பாடுகளைப் பற்றி சற்றும் அறிந்திருக்கவில்லை. நான் திருமணம் செய்த பெண்ணும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் எம் பண்பாடுகள் எங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டது. எங்கள் பூர்வீக பாரம்பரியங்கள் மீளவும் எமக்கிடையே வழக்கத்திற்கு வருவதை எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு வழக்கத்திற்கு வந்தால் நான் சந்தோசப் படுவேன்' எனத் தனது கருத்தை முன் வைத்தார். அதுமட்டுமன்றி தங்களது பாரம்பரிய விடயங்களை தனது சமூகத்தினரிடையே வழக்கத்திற்குக் கொண்டுவருவது அவ்வளவு இலகுவானதல்ல என்றும் அவற்றை அவர்களது வழக்கத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்ற ஆசை தன்னிடம் இருக்கிறது என்றும் கூறினார்.

புத்தளத்தில் வாழும் காப்பிரி மக்களுடன் கலந்துரையாடியபோது அவர்களிடம் உங்களது பூர்வீக சமூகத்தினுடைய பெயரான 'காப்பிரிகள்' என்னும் சொல்லாடல் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? என்று கேட்டேன். அதற்கு புத்தளத்தின் சிரம்பியடியிலுள்ள காப்பிரிச்சமூக பெண்மணியான செரின் அலெக்ஸ் என்பவர் கூறிய பதிலானது 'காப்பிரி' என்னும் பெயரானது எங்களுடைய மூதாதையர்கள் தம்மைத் தாமே அழைப்பதற்குப் பயன்படுத்திய பெயர், அத்தோடு அப்பெயரானது எமது பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களில் எழுதப்பட்டுள்ளது. அதனால் எங்களை காப்பிரிச் சமூகத்தினர் என்று அழைப்பதை மிகவும் சந்தோசமாக ஏற்றுக்கொள்கின்றோம்.' என்று கூறினார். இதிலிருந்து அவர்கள் தங்களது பூர்வீக சமூகத்தினரால் அழைக்கப்பட்ட காப்பிரிகள் என்னும் சொல்லாடலை எற்தளவிற்கு விரும்புகின்றனர் என்பது தெளிவாகப் புலப்படுகின்றது.

தொடர்ந்து அவர்களிடம் உரையாடியபோது செரின் அலெக்ஸ் அவர்களும் அவருடைய சகோதரியான ஜுலியட் ஜொஸ்பின் அவர்களும் ஒரு கூற்றினை என்னிடம் முன்வைத்தார்கள். அதாவது தாங்களும் தங்களது சமூகத்தைச் சேர்ந்த சிலரும் ஒருமுறை தங்களது தாய்பூமியான ஆபிரிக்காவிற்குச் சென்றபோது அங்குள்ள காப்பிரிச் சமூகத்தினர் தங்களிடம் 'நீங்கள் யார்?' என்று கேட்டதற்கு அவர்கள் 'நாங்கள் காப்பிரிச் சமூகத்தவர்கள், இலங்கையிலிருந்து எங்களது தாய்நாட்டைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் வந்திருக்கின்றோம்' எனக்கூறினார்களாம். ஆனால் ஆபிரிக்கக் காப்பிரி மக்கள் இவர்களை 'நீங்கள் காப்பிரிகள் இல்லை இலங்கைக் காப்பிரிகள் என்றுதான் கூறவேண்டும்' எனக் கூறினார்களாம். அதுமட்டுமல்லாது இவர்களை ஆபிரிக்க மக்கள் தங்களது சமூகத்துள் சேர்த்துக்கொள்ளாது வேறொரு சமூகமாகக் கருதினார்களாம் என்று கூறியதோடு அவ்வாறு அவர்கள் தங்களை 'இலங்கைக் காப்பிரிகள்' என்று கூறியது தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததாகவும் அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

இதிலிருந்து எமக்கு ஒரு விடயம் தெளிவாக விளங்குகின்றது. என்னவெனில் இவர்கள் காப்பிரிகள் என்று கூறுவதையே இன்றுவரை விரும்புகின்றார்கள். இலங்கைக் காப்பிரிகள் என்ற சொல்லாடலை அவர்கள் பெருமளவு விரும்பவில்லை. அதுமட்டுமன்றி ஆபிரிக்கக் காப்பிரிகளுடன் உறவினை ஏற்படுத்திக்கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றார்கள் என்பதும் எமக்குப் புலனாகின்றது.

இவ்வாறானதொரு கருத்தினை புத்தளத்திலுள்ள பெரியவர்கள் மட்டுமன்றி இளவயதினரும் கொண்டிருக்கின்றார்கள். சிரம்பியடியிலுள்ள காப்பிரிச் சமூகத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலைக்குச் செல்லும் மாணவியான சஞ்சனா தயானியிடம் இது பற்றிக் கேட்டபோது  அவர் கூறியதாவது 'வகுப்பில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நன்றாகப் படித்து சிறந்த ஆசிரியராக வரவேண்டும் என்பது என்னுடைய இலட்சியம். நல்லதொரு ஆசிரியரானால்தான் அதன் மூலம் எமது சமூகத்திற்கு எமது பூர்வீகம், பாரம்பரியம் குறித்த விளிப்புணர்வை ஏற்படுத்த முடியும்' என்றும் கூறினார்.

இதனை வைத்துக்கொண்டு பார்க்கும்போது அச்சமூகத்திலுள்ள பெரியவர்கள் மட்டுமன்றி சிறுவர்கள்கூட தங்களது சமூகம் தொடர்பான பூர்வீக வழக்காறுகள், பண்பாடுகள், கலாசாரங்கள், சடங்குகள், பழக்கவழக்கங்கள் அனைத்தையும் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளதோடு அதனைக் கடைசிவரை பின்பற்ற வேண்டும் என்றும் இனிவரும் சந்ததியினருக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்னும் ஆர்வத்துடனும் இருப்பதனை எம்மால் ஆதாரபூர்வமாக அவதானிக்க முடிகின்றது.

புத்தள வாசியான மார்க் ஜோசப் எலியஸ் என்பவரை நேரில் கண்டு உரையாடியபோது அவர் மிகுந்த கவலையோடு எனக்குச் சில தகவல்களை வழங்கினார். அதாவது 'இன்றுள்ள காலகட்டத்தில் எங்களது சமூகம் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்வதனால் எம்மில் சிலர் சிங்களப் பாரம்பரியத்தைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார்கள். அதனால் காப்பிரிச் சமூகத்திற்கான பாரம்பரியங்கள் எங்களை விட்டு மெதுமெதுவாகப் போவதாக நான் உணர்கிறேன். ஆனால் அதிகமான எமது சமூகத்தினர் அவற்றை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகப் புத்தளத்தின் சிரம்பியடியில் உள்ள காப்பிரிச் சமூகத்தினர் அதனைப் பெருமளவு தொடர்வதாக உணர்கிறேன். அதையிட்டு எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது' என்று தன்னுடைய கருத்தைக் கூறினார்.

தொடர்ந்து ஆரம்பத்தில் எமது மூதாதையர் பின்பற்றிய அனைத்துப் பாரம்பரியங்களும் மீண்டும் முழுமையாக எமது மக்களிடையே பழக்கத்திற்கு வரவேண்டும் என்ற ஆசை எனக்கு மிகவும் அதிகமாகவே உள்ளது என்றும் என்னிடம் கூறினார். அதுமட்டுமல்லாது அவருடைய மகனும் இவ்விடயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது தெளிவு. ஏனெனில் அவருடன் உரையாடியபோது அவர் தங்களது சமூகம் பற்றிக் கூறியதோடு தமது சமூகத்திற்கே உரித்தான கலைகளில் ஒன்றான 'பைலா' நடனம் பதிவு செய்யப்பட்ட இறுவெட்டு ஒன்றையும் நாங்கள் பார்வையிடவேண்டும் என்பதற்காக எனக்கு வழங்கினார்.

இவர்களுடைய கருத்தினைக் கொண்டு பார்க்கும்போது காப்பிரி சமூகத்திற்கான பாரம்பரியங்கள் முழுமையாக இன்று அவர்களுடைய வாழ்வில் இல்லை என்பதும் ஒருசில பண்பாடுகள் இன்றும் தொடரப்படுவதையும் காணமுடிகின்றது. அத்தோடு அவர்கள் தமது சமூகத்தினுடைய அனைத்துப் பாரம்பரியங்களையும் பாதுகாக்கவேண்டும் என்றும் அவற்றைத் தமது இளம் தலைமுறையினரிடம் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லவேண்டும் என்ற அவாவுடன் இருப்பதையும் காண முடிகின்றது.

எனவே மேலே கூறப்பட்ட பல்வேறு காப்பிரி சமூகத்தவர்களுடைய கருத்துக்களையும் ஆதாரமாகக்கொண்டு பார்க்கும்போது இலங்கையின் திருமலை மற்றும் புத்தளத்தில் வசிக்கும் காப்பிரிச் சமூகத்தினர் பலரின் கருத்தாக உள்ளது, அவர்களது மூதாதையர் தங்களை அழைத்த 'காப்பிரிகள்' என்னும் பெயரை அழியவிடக்கூடாது, அதனை என்றும் நிலைக்கச் செய்யவேண்டும் என்பதும் அத்தோடு தங்களது பாரம்பரியமான பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், வாழ்க்கை நடைமுறைகள், தெய்வ நம்பிக்கைகள், ஒழுக்கக் கோட்பாடுகள் போன்ற அனைத்து விடயங்களையும் அழியவிடாது பாதுகாக்கவேண்டும், அவற்றை வரும் தலைமுறையினருக்கு கொண்டுசெல்லவேண்டும் என்ற விருப்புடனும் அதனை எமது சமூகத்தினர் பாதுகாப்பர் என்னும் நம்பிக்கையுடனும் இருப்பது எமக்கு ஆதாரபூர்வமாகத் தெளிவாகின்றது. அத்தோடு மேலே என்னால் கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் நான் நேரடியாக திருமலை பாலையூற்றுக் காப்பிரிச் சமூகத்தினரிடமும், புத்தளக் காப்பிரிச் சமூகத்தினரிடமும் நேர்காணல் செய்தபோது அவர்கள் எனக்கு வழங்கியவை என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

சரணியா சந்திரகுமார்
நுண்கலைத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்