களரியில் ஆடப்படும் கத்தோலிக்க கூத்துக்கள்: கலாநிதி. சி. ஜெயசங்கர்

இன்றைய நிலையில் கத்தோலிக்க கூத்துக்கள் மேடையில் படிக்கப்படுவதாகவே அறியப்பட்டும், அறியப்படுத்தப்பட்டும் வருகின்றன. பாட்டைப் பிரதானமாகக் கொண்டு ஆற்றுகை செய்யப்படுவதாலேயே 'கூத்துப் படிப்பது' என்றழைப்பது பழக்கத்தில் இருந்துவருகின்றது.

சமயத்தை மக்கள் மயப்படுத்துவதற்கு வலுவான ஊடகங்களாக கூத்துக்கள் அடையாளம் காணப்பட்டு அவை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இந்தவகையில் அவை வெற்றிகரமாகவும் அமைந்திருக்கின்றன என்பது வரலாறும் நடைமுறையும் ஆகும்.

ஆயினும் சமயக் காரணங்களால் களரியில் ஆடப்பட்டு வந்த கூத்துக்கள் படச்சட்ட மேடைக்குள் ஏறிப்புகுந்து கொள்வதுடன் பின்னர் அதன் ஆடல் அம்சத்தையும் கழற்றிவிட்டிருக்கிறது.

ஆடலை இழந்த ஆற்றுகை, பாடலில் கவனத்தை குவிக்கத் தொடங்கிவிட்டிருக்கிறது. இது பாடலில் மெருகேற்றத்தை கொண்டுவந்து ஆட்டக்கூத்தை 'கூத்துப் படிப்பது' அல்லது 'கூத்துப் படிக்கிறது' எனப் பெயரையும் வரித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில் மட்டக்களப்பில் இன்னமும் களரியில் ஆடப்பட்டுவரும் கத்தோலிக்க கூத்துக்கள் பற்றி உரையாடுவது புதிய திறப்புக்களுக்கு உதவுவதாக இருக்குமெனக் கருதமுடிகிறது.

மட்டக்களப்பில் பரவலாக ஆடப்பட்டுவரும் கூத்துக்களின் பாடுபொருள் புராண, இதிகாசங்கள், வரலாறுகள், கற்பனைக்கதைகள் என்பவையாக இருக்கின்றன. இவற்றிற்குச் சமமாக இல்லாவிட்டாலும் சமாந்தரமாக சிறுவர் கூத்துக்கள், மீளுருவாக்கக் கூத்துக்கள், உள்ளுர்த் தெய்வவரலாறுகள், வழக்காறுகள் என்பவை கூத்தாக ஆடப்பட்டுவருகின்றன. இச்சமாந்தர முன்னெடுப்புக்கள் எல்லாம் அண்ணாவிமாரின் வழிநடத்தலிலும் மூத்த கூத்தர், கூத்துஆர்வலரின் முகாமைத்துவத்திலும் நவீன அரங்கக் கலைபுலமையாளரின் பங்கேற்பிலும் கருத்தாக்கத்திலும் நிகழ்ந்துவருகின்றன.

மேற்குறிப்பிட்ட கூத்தரங்கச் செயற்பாடுகளின் அளவிற்கு இல்லாவிடினும் கத்தோலிக்கக் கூத்தைக் களரியில் காணும் வாய்ப்பும் இன்னமும் இருந்துகொண்டிருப்பது அரங்க முக்கியத்துவமும் சமூக முக்கியத்துவமுடைய விடயமாகும்.

இந்த வகையில் தன்னாமுனையில் 2011இ;ல் ஆடப்பட்ட முழு இரவுக் கூத்தும் 2015இல் ஆடத் தொடங்கப்படும் முறக்கொட்டாஞ்சேனை ஞானபுத்திரன் கூத்தும் கவனத்திற்குரியதாக அமைகின்றன. இது நிகழ்வதற்கு ஆதாரமாக இருந்து கொண்டிருக்கின்ற அண்ணாவியார் சீனித்தம்பி அலெக்சாண்டர் அவர்கள் மதிப்புக்குரியவர் ஆகின்றார். எந்த வகையிலான ஆதரவும் அங்கீகாரமும் இல்லாவிட்டாலும் இக்கலையினைத் தன்னுள் அடைகாத்து வைத்திருக்கும் அவரது அர்ப்பணிப்பு கற்றலுக்குரியது.

ஒவ்வொரு செயலிலும் இலாப நட்டக் கணக்குப் பார்க்கும் சமூகச் சூழலில் இத்தகைய ஆளுமைகளின் இருப்பு வெறும் மாதிரிகள் அல்ல மிகப்பெரும் உதாரணங்களே ஆகும்.

கடுங்கோடை எல்லாம் உயிர்காத்து நீர்விழும் பொழுதுகளில் துளிர் விட்டு உயிர் காக்கும் வேர்களும் வித்துக்களுமான மனிதர் இவர்.

கூத்தரங்கின் மற்றுமொரு அழகு புலவர்கள் பல்வேறு மத கூத்துக்களையும் பாடியிருக்கின்றார்கள், அண்ணாவிமார்கள் அவ்வாறே பல்வேறு மதக் கூத்துக்களை ஆட்டுவித்திருக்கிறார்கள். கூத்தர்களும் அவ்வாறே ஆடியிருக்கிறார்கள். இதேவேளை சமய மோதல்கள் முரண்பாடுகள் என்பவையும் இருந்திருக்கின்றன என்பதும் மறைப்புக்குரியதல்ல.

மனிதர்களிடமிருந்து பிரிக்கமுடியாதவையாக சமயங்கள் காணப்படுவதுடன், மனிதர்களை பிரித்து நிற்பவையாகவும் 21ஆம் நூற்றாண்டிலும் வளர்ச்சி

கண்டிருப்பது நவீனத்துயரம் ஆகும்.
மனிதர்களை மனிதர் கொல்லும்
வாழ்க்கை தன்னைவெற்றியென்றோம்
மனிதருடன் மனிதர் வாழும்
வாழ்க்கையல்லோ வெற்றியாகும்'
  
  (சிம்மாசனபோர் கூத்துமீளுருவாக்கல் பாடல்)
கூத்தரங்கில் அடியோடிக் கிடக்கும் பேதங்கள் கடந்த மனிதர்களது ஊடாட்டங்களையும் உருவாக்கங்களையும் கூத்தாடுவோம் கொண்டாடுவோம்.

கலாநிதி. சி. ஜெயசங்கர்