மாணவர்களை கடத்தி திருகோணமலை முகாமிற்கு கொண்டுசென்ற வேன் மீட்பு


கொழும்பின் புற நகர் பகுதியான தெஹிவளையில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்களின் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கடத்தல் சம்பவங்களுக்கு பயன்படுத் தப்பட்டதாக கூறப்படும் வேனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.



காணாமல்போனோர் தொடர்பிலான ஐ.நா.வின் செயற் குழு அண்மையில் திருகோணமலை கடற்படை முகாமிற்கு சென்றிருந்த காலப்பகுதியிலேயே, அந்த முகாமிற் குள் வைத்து குறித்த வேன் அடையாளம் காணப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் உறுதிப்படுத்தின.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் ஆலோசனைக்கு அமைய குறித்த பிரிவின் பொறுப்பதிகாரி நிஸாந்த டீ சில்வா தலைமையிலான விசாரணைக் குழுவினரே இந்த வேனை தற்போது கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வேனானது பல கடத்தல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், 2010 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் கடற்படையை குறிக்கும் இலக்கத்தகட்டுடன் அது கடற்படையின் தேவைக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வேனை புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுக்க சென்றுள்ள போது திருகோணமலை கடற்படை முகாமில் அவர்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பின்னர் கடற்படை தளபதிக்கு விடயம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விரிவாக விளக்கைய பின்னரேயே அதனை கைப்பற்ற முடிந்துள்ளது.

இந்த நிலையில் 5 மாணவர்கள் உள்ளிட்ட கடத்தல்கள் தொடர்பில் விசாரணை செய்துவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது வரை ஒருவரை மட்டுமே அது தொடர்பில் கைது செய்துள்ளனர்.

முன்னாள் கடற்படை வீரரான சம்பத் முனசிங்க என்பவரையே கடற்படையினர் இந்த கடத்தல்கள் தொடர்பில் பிரதான சந்தேக நபராக கைது செய்துள்ள நிலையில் அவர் தற்போது பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை வரை புலனாய்வுப் பிரிவினரால் செய்யப்பட்டுள்ள விசாரணைகளில் இக்கடத்தல் விவகாரம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி எதிர்வரும் வெள்ளியன்று கடற்படையின் 5 முக்கிய புள்ளிகளை விசாரணைக்கு உட்படுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் குறித்த அதிகாரிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

அத்துடன் இந்த கடத்தலின் பின்னர் கடத்தப்பட்டவர்கள் திருமலை இரகசிய முகாமில் வைக்கப்பட்டமை தொடர்பில் ஆதாரங்கள் உள்ளதால், அப்போது கிழக்கு கடற்படையின் கட்டளை தளபதியாக இருந்த வைஸ் அட்மிரல் ஜயந்த கொலம்பகேவிடமும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

முன்னதாக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தனது பாதுகாப்பு அதிகாரியான லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு (சம்பத் முனசிங்க)எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டின் கீழ் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டு கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைய கடந்த 2008.09.17 அன்று இரவு தெஹிவளை, பெர்னாண்டோ மாவத்தையில் வைத்து ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் ராமலிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகிய மாணவர்களும், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆரச்சி, திருகோணமலையைச் சேர்ந்த கனகராஜா ஜெகன், தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகிய 11 பேர் கடத்தப்பட்டு திருமலை இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதரங்கள் அந்த விசாரணைப் பிரிவிடம் உள்ளது.

இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் கொழும்பு சைத்திய வீதியில் உள்ள புட்டு பம்பு எனும் ரகசிய தடுப்பு இடத்திலும் திருகோணமலை கடற்படை தளத்தின் கன்சைட் எனும் இரகசிய நிலத்தடி சிறைக் கூடத்திலும் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமைக்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு சைத்திய வீதியில் 'புட்டு பம்பு' எனும் பெயரிலும் திருகோணமலை கடற்படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான பீட வளாகத்தில் நிலத்துக்கு கீழ் 'கன்சைட்' எனும் பெயரிலும் கடற்படையின் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்துள்ளமை தொடர்பில் மன்றுக்கும் புலனாய்வு பிரிவு அறிக்கை சமர்பித்துள்ள நிலையிலேயே தற்போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெயரில் இரகசிய தடுப்பு முகாம்களை நடத்திச் சென்றமை தொடர்பில் அப்போதைய திருகோணமலை கடற்படையின் கட்டளை தளபதியும் தற்போதைய கடற்படை தலைமையக விநியோக பிரிவு பணிப்பாளராக கடமையாற்றுபவருமான கொமாண்டர் கஸ்ஸப கோத்தாபய போல் உள்ளிட்ட 22 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சாட்சியமளித்துள்ள நிலையில் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேவுக்கும் அறிக்கை சமர்பித்திருந்தனர்.

இந்த விவகாரங்கள் தொடர்பில் அப்போதைய கடற்படை பேச்சாளருடம் சிறப்பு கடற்படை புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் செயற்பட்ட கெப்டன் தஸநாயக்க உள்ளிட்ட பலரிடம் ஏற்கனவே விசாரணைகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.