சட்ட உதவி ஆணைக்குழுவின் உதவியோடு ஆலையடிவேம்பில் திருமணப் பதிவுகள் வழங்கிவைப்பு

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய திருமணப் பதிவுகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப் தலைமையில் நேற்று (30) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு சார்பில் சட்டத்தரணியும் சட்ட ஆலோசகருமான எம்.எச்.ருஷ்டி, சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.எம்.சுபைர், திட்ட உத்தியோகத்தர் பி.எம்.கலாமுடீன் ஆகியோரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், கிராம அலுவலர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச மற்றும் பதிவாளர் பிரிவின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.புண்ணியநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலதிக மாவட்டப் பதிவாளரது தலைமையுரையைத் தொடர்ந்து இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், இலங்கையில் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளல்லாது கடந்தகாலங்களில் சமயச் சடங்குகள் மூலமாகத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் பலர் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வயது முதிர்ந்தவர்களாகவும், தலைமுறைகளைக் கடந்தவர்களாகவும் காணப்படுவதாகக் குறிப்பிட்டதுடன், இதுவரைகாலமும் அவர்கள் தமது திருமணத்தைச் சட்டரீதியாக எழுத்துமூலம் பதிவு செய்வதில் போதிய விழிப்புணர்வுகள் அற்றவர்களாகக் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டடார். அத்துடன் இந்நிகழ்வின் மூலம் அவர்களது திருமணங்கள் இன்றுமுதல் சமுகத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதாகவும் கூறியதோடு இவ்வாறானதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க வைபவமொன்றை நடாத்துவதில் முன்னின்று உழைத்த ஆலையடிவேம்பு பிரதேச செயலக மேலதிக மாவட்டப் பதிவாளர் தலைமையிலான உத்தியோகத்தர் குழாமுக்கும் சட்ட உதவி ஆணைக்குழுவின் பணியாளர்களுக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் திட்ட உத்தியோகத்தர் கலாமுடீன், தமது வேலைத்திட்டங்களின் ஒருபகுதியாகவே குறித்த திருமணப் பதிவுகள் எவ்வித கட்டண அறவீடுகளுமின்றி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டதுடன், குறித்த ஆவணங்களைத் தயாரிப்பதிலும் பொதுமக்களுக்குத் தமது ஆணைக்குழுவால் வழங்கப்படும் சட்ட உதவிகளுக்கு உண்டாகும் செலவுகளுக்கான நிதியினை ஐரோப்பிய ஒன்றியம் தமக்கு வழங்கிவருவதாகவும் தெரிவித்தார். மேலும் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற சட்ட உதவிகளை நாடிநிற்கும் பொதுமக்கள் இலவசமான தகவல்கள், சட்ட ஆலோசனைகள், சட்ட உதவிகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மூதூர் (0262238777), பொத்துவில் (0632248485), அக்கரைப்பற்று (0672279462) பிராந்திய அலுவலகங்களைத் தொடர்புகொள்ளமுடியுமெனவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தமது திருமணங்களை இதுவரையில் பதிவு செய்திராத தம்பதிகளுக்கு திருமணப்பதிவுகளைக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது 23 தம்பதியினர் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் மாலைகளை மாற்றிக்கொண்டு தமக்கான திருமணப்பதிவுகளை அதிதிகளிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வின் இறுதியில் கருத்துத் தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலக மேலதிக மாவட்டப் பதிவாளர் பிரதீப், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் உதவியுடன் எதிர்காலத்திலும் இதுபோன்ற பல நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், இப்பிரதேச மக்களுக்குத் திருமணப்பதிவுகள் மட்டுமன்றி பதிவுசெய்யப்படாத பிறப்புப் பதிவுகள், மரணப் பதிவுகள் என்பவற்றையும் இலவசமாக வழங்குவதற்குத் தான் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.