மட்டக்களப்பு புதிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒரு வேண்டுகோள்.

வாழ்வாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்குமாறு கோரிக்கை.

2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியின் கீழ் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் ஒவ்வொரு வேலைத்திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதிபற்றிய விபரங்கள் திட்டமிடல் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும், தெரிய வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட நிதியினை ஒதுக்கீடு செய்த விதம் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்படுத்தப் பட்டதை இங்கு குறிப்பிட்டாக வேண்டி உள்ளது. அருமையாக கிடைக்கப்பெற்ற வளங்களில் இருந்து உச்சப்பயனைப் பெறுவதற்கான முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என பல்வேறு தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 965 கிராமங்களிலும் களப்பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 25727 பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் உள்ளதென தெளிவான புள்ளி விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது 2007 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் இறுதி யுத்தம் முடிவுற்ற பின்பு 06.11.2008 ஆம் திகதியில் உள்ள படி பெறப்பட்ட புள்ளி விபரமாகும். சரியான எண்ணிக்கை தெரியாவிடினும் உத்தேசமாக சுமார் 3000 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து காணமல் போகச் செய்யப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கைம்பெண்களின் வாழ்வாதாரத்துக்கென அங்கொன்றும் இங்கொன்றுமாக சில உதவிகள் வழங்கப்பட்டதேயன்றி திட்டமிட்ட அடிப்படையில் உருப்படியாக ஏதுமின்றி சுமார் 99 வீதமான விதவைகளின் வாழ்க்கை கண்ணீரிலேயே கரைந்து போகிறது. அக் கண்ணீரை கண்ணால் கண்ட மன வேதனையிலேயே நமது அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு இவ் விடயம் இதன் மூலம் கொண்டுவரப்படுகிறது.

தேவைகள் எண்ணற்றவை. தேவையானவற்றிற்கே நிதியினை ஒதுக்கீடு செய்வதாக மேற்படி உறுப்பினர்கள் கூறுகின்றனர். பிரச்சினை அதுவல்ல; தேவைகளை முன்னுரிமைப்படுத்தி முதன்மை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதா? என்பதே கேள்விக்குரிய விடயமாக உள்ளது. கடந்த காலங்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட சில வேலைத்திட்டங்களை இங்கே குறிப்பிடலாம்.

மட்டக்களப்பு நகர ஓய்வூதியர்களின் சங்கத்திற்கு போட்டோக் கொப்பி மிசின் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தனது கிராமத்தில் உள்ள அமைப்பு ஒன்றுக்கும் பிரதிபடுத்தல் இயந்திரம் ஒன்றை வழங்குவதற்காக உறுப்பினர் ஒருவரால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் வாக்கு வங்கியை மனதில் கொண்டு அங்குள்ள அமைப்பு ஒன்றுக்கு புரஜெக்றர் இயந்திரம் ஒன்று வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்குவதற்கு எனவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று தெரிவித்தது,
ஆலயக்கட்டடங்களின் புனரமைப்பு, சுற்றுமதில் , ஒலிபெருக்கி என்பவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பாடசாலைகளுக்கும், கட்டங்கள், சுற்று மதில், போடோக்கொப்பி மிசின் என்பவற்றிற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விளையாட்டுக் கழகங்கள், இசைக் குழுக்கள் என்பவற்றிற்கும் தேவையானவற்றை வழங்குவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்படி வேலைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விதம் அவசியமானதா? அல்லது அத்தியாவசியமானதா? என்பதே விவாதத்திற்கு உரிய விடயமாக உள்ளன.

ஒரு பாராளு மன்ற உறுப்பினர் ''8500 தமிழ் பிள்ளைகள் பாடசாலை செல்வதில்லை'' என கவலைப்பட்டாரேயொழிய அதற்க்கான அடிப்படைக் காரணம் எதனையும் சிந்திக்கவில்லை. மேற்படி குடும்பங்களின் வாழ்வாதாரம் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தினால் அடிபட்டுப் போனதே இப்பிரச்சினைக்கான உண்மையான காரணமாகும்.

இப்போது என்ன பிரச்சினை? புதிய பாராளு மன்ற உறுப்பினர்களாவது முன்பிருந்தவர்கள் செய்த தவறுகளைத் தொடராது கைம்பெண்கள், காணாமல் போனவர்களது மனைவியர்களது வாழ்வாதாரத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும்.

இப்பெண்களுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது அமைப்புக்களை ஏற்படுத்தியோ அவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்காக சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கலாம். உதாரணமாக இவ் விதவைகளின் குடும்பத்தில் உள்ள மூத்த பிள்ளைகள் பாடசாலை செல்ல துவிச்சக்கர வண்டிகள் வழங்குதல், தையல் மிசின்கள் வளங்குதல், சிற்றுண்டிகள் தயாரித்து பொதி செய்வதற்கான உதவி வளங்குதல், அரிசிமா தயாரித்து பொதிசெய்தல், பெட்டிக்கடைகள் வைத்தல், ஆடு,மாடு, கோழிகள் வளர்ப்புக்கு உதவி செய்தல், மற்றும் விவசாயம் என இன்னோரன்ன தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு தகுந்த நிபுணர்களிடம் ஆலோசித்து செயற்திட்டங்களை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்யலாம்.

திட்டமிடல் அமைச்சின் விதிகளும், சுற்றறிக்கைகளும் இவ் வேலைத்திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அனுமதி அளிக்காமல் இருக்கலாம். எனினும் முடியுமான வரை முயற்சி செய்து இவ் விதவைகளின் வாழ்வாதாரத்திற்கு ஏதாவது வழி செய்வது இப் புதிய பாராளு மன்ற உறுப்பினர்களின் முதற்க் கடமையாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இம்முறை 450 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் சுமார் 75 வீதமான நிதியினை இவ் விதவைகளின் வாழ்வாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்ய முடியாதா? இந்த 75 வீதமான நிதியினைக்கொண்டு அனைவருக்கும் இல்லா விடினும் சுமார் தொள்ளாயிரம்  (900)  விதவைகளுக்காவது வாழ்வாதாரம் அளிப்பதே பெரிய விடயமாகும். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களே ! உங்களுக்கு வாக்களித்த விதவைகளும் அவர்களது பிள்ளைகளுமாக எத்தனை பேர் தினந்தோறும் பசியோடும், பட்டினியோடும் இரவு நித்திரைக்கு போகின்றனர் என்பதை அறிவீர்களா?

இந்த மாவட்டத்தில் இடம்பெறும் கலாச்சாரச் சீரழிவுகள், உங்கள் காதுகளில் இன்னும் எட்டவில்லையா? அவலத்திற்கு உள்ளான யுத்தம் பிரசவித்த இவ் விதவைகளின் வாழ்வாதாரத்திற்கு  நீங்கள் ஏதாவது செய்வீர்களா? அப்படியாயின் அதுபற்றி மக்களுக்கு தெரியப்படுத்துவீர்களா?

இங்கனம்
சமூக ஆர்வலர்