ஆறு ஆண்டுகளின் பின் மண்முனை மேற்கு கோட்டத்தில் தரம் 1ற்கு ஒரு மாணவர்களும் இல்லாத நிலை ஏற்படவாய்ப்பிருக்கின்றது. - க.சத்தியநாதன்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குள் இந்த வருடம்  முன்பள்ளி பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 1983ஆகும்.  கடந்த வருடம் முன்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2262ஆகும். இந்த வருடம் கடந்த வருடத்தை விட அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கின்றது. இதற்கு காரணம் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது இதனால் மாணவர்களின் அனுமதி வீதம் குறைவடைந்திருக்கின்றது.  

முன்பள்ளி மாத்திரமின்றி அதன் எதிரொலி பாடசாலைகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இந்த வீதத்தில் பிள்ளைகளின் பிறப்பு குறைவடைந்து சென்றால் இன்னும் ஆறு ஆண்டுகளில் மண்முனை மேற்கு கோட்டத்தில் தரம் 1ற்கு ஒரு மாணவர்களும் இல்லாத நிலை ஏற்படவாய்ப்பிருக்கின்றது. இது புள்ளிவிபரங்களை வைத்துக் கொண்டு கூறுகின்றேன். இதைகருத்தில் கொண்டு இதற்கு என்ன பரிகாரங்களை தேட வேண்டும் என்ற முயற்சியில் சமூகத்தில் உள்ள அனைவரும் செயற்பட வேண்டுமென மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் தெரிவித்தார்.

முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் இன்று(13.02.2016) சனிக்கிழமை இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேலுள்ளவாறு குறிப்பிட்டார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர்  

விளையாட்டை உடல் ஆரோக்கியம் உள ஆரோக்கியம் என்று கூறுவதை விட இன்று சமூகத்திலே தலைநிமிர்ந்து நிற்கின்ற இலட்சாதிபதிகளை உருவாக்கியிருக்கின்ற துறையாக கூறமுடியும். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு பகுதியினர் இலங்கையில் கிறிக்கட் விளையாடி அதில் உழைத்த பணத்தில்தான் இலட்சாதிபதியாக இருப்பதாக பத்திரிகையொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மாணவர்கள் அனைவரும் விளையாட்டின் ஊடாகவும் மிளிர்ந்தால் ஒரு பிரபலமான, பிரசித்திபெற்ற நபராக உருவாகுவதற்கும் அதைவிட நிதிவளத்தில் உயர்ந்தவராக இருக்கவும் முடியும். இதற்கு ஆதாரமாக இந்தியாவில் 20வயதுடைய ஒரு மாணவன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதற்காக மும்பாய் அணி அவரை 3.2கோடி ரூபாய் பணம் கொடுத்து வாங்கியுள்ளது. ஆகவே விளையாட்டின் ஊடாக நிதியை பெற்று சமூகத்திற்கு சேவையாற்றக் கூடியவர்களாக உருவாக முடியும் என்றார்.