கோத்தாபய ராஜபக்ஷவின் தற்கொலை குண்டுத்தாக்குதல் ஒரு நாடகம் : சரத் பொன்சேகா

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வாகன தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் ஒரு நாடகமாக இருக்கலாம் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் சந்தேகம் வெளியிட்டார்.

தான் பயணம் செய்த கார் மீது அவரே (கோத்தா) திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், குண்டு துளைக்காத காரின் மீது 25 மீற்றருக்கு அப்பாலிருந்து குண்டை வெடிக்கச்செய்யும் அளவுக்கு பயங்கரவாதிகள் முட்டாள்கள் அல்ல என்றும் கூறினார்.


குருநாகல் பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இராணுவத்தினர் குறைக்கப்பட்டமை குறித்து உரையாற்றும் போதே பீல்ட் மார்ஷல் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் காரின் மீது கொழும்பில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகம் உள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரே இந்தத் தாக்குதலை திட்டமிட்டு செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

2006 இல் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வாகன தொடரணி மீது கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் கையில் சிறு காயத்துடன் அவர் உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்பை குறைக்குமாறு நீதிமன்றம் சென்ற குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ தன்னுடைய பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷ முன்னாள் ஜனாதிபதியாக அன்றி பாராளுமன்ற உறுப்பினர் போன்று நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் அவருக்குப் போதியளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் இருந்த காலத்தில் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினரும் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கினர்.

எனினும், பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினரின் பாதுகாப்பு அவசியமில்லை. பிரமுகர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்கக் கூடிய பயிற்சிபெற்ற பொலிஸார் போதுமானது. அரசியல்வாதிகளின் பாதுகாப்புத் தொடர்பில் அரசாங்கமே முடிவு செய்யும். அது தொடர்பில் அரசாங்கத்துக்கே முடிவெடுக்க முழு உரிமை இருக்கிறது.

மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இருக்கும் கப்டன் நெவில் போன்றவர்கள் எந்தவித பிரபுக்களுக்கான விசேட பயிற்சியும் பெற்றிராதவர்கள். இவர்கள் மஹிந்த ராஜபக்‌ஷவின் அடியாட்களாகவே செயற்படுகிறார்கள். ஒழுக்க நெறி தெரியாமல் கிருலப்பனை குழுவினர் பாராளுமன்றத்தில் கோஷம் எழுப்புகின்றனர்.

எனது பாதுகாப்புக்கன கொமா ண்டோ பாதுகாப்பைக் கோரியபோது நான் ஓய்வு பெற்றிருப்பதால் வழங்க முடியாது என அன்று நிராகரித்திருந்தார்கள்.

இராணுவப் பாதுகாப்பு இன்றி மஹிந்த ராஜபக்‌ஷவினால் தூங்க முடியாவிட்டால் அவர் வீட்டிலேயே இருந்துகொள்ளட்டும். உலகில் தலைசிறந்த இராணுவத் தளபதி என்று கூறி எனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது, ஆனால் பின்னர் எனது பாதுகாப்பை நீக்கி சிறையில் அடைத்தார்கள். எனக்கு 15 பொலிஸார் மட்டுமே பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளனர் என்றார்.

தினேஷ் குணவர்த்தன எம்பி

பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டி நாட்டை ஒன்றிணைத்து ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்டிய மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்கு பயிற்றப்பட்ட விசேட இராணுவ வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

அவருக்கு வழங்கும் பாதுபாப்பை நீக்கப்போவதில்லையென சபைமுதல்வர் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.

ஆனால் அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை மீள்பரிசீலனை செய்ய அரசாங்கம் தயாராக இருக்கிறதா? அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார்.