சுடராகி விபுலமணி துணையாழ்வார் எம்மவர்க்கே விஸ்வப்பிரம்மம் வை.இ.எஸ். காந்தன் குருக்கள்


(சிவம்)
உலக தமிழ் பேராசிரியரான முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளின் உருவச்சிலை திறப்பு விழா கடந்த 21.04.2016 காரைதீவில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட விஸ்வப்பிரம்மம் வை.இ.எஸ். காந்தன் குருக்களினால் அருளப்பட்ட பாமாலை.

தேனாடாம் மட்டூரின் திகழ்கின்ற தென்பால்
 செழுந் தமிழர் வாழுகின்ற சீராளர் பூமி
மானமிகு குடியாளர் மறவர் குலமாக
 மண்ணாழும் வேட்கைமிகு வித்தாடும் பூமி
மானாகர் தவச்செல்வி மணிச்சிலம்பு கரமுடையாள்
 மகிடையுடன் வீற்றிருந்து அருள்பொழியும் பூமி
தேனான மொழி குலைய தித்திக்கும் விருந்திட்டு
 சிந்தையெல்லாம் காதல் கொள்ள அரவணைக்கும் மூதூர்

இம்மண்ணின் இப்பெருமை என்னவென்ளு சொல்வேன்
 இதயமெல்லாம் பூரித்து இறுமாப்புக் கொள்கின்றேன்
செம்மொழியாம் தமிழ் மொழியை சிந்தையிலே ஏற்று
 சீர்கனிந்த இலக்கியங்கள் படைத்திடுவார் இம்மண்ணில்
அம்புவியில் இம்மண்ணில் ஆற்றல்மிகு பெருமைதனை
 அறிஞரெல்லாம் அகமேற்றிஅ ன்புருகிப் பணிவார்கள்
உம்பர்களும் இம்மண்ணில் ஒருமுனிவன் வரவை
 உத்தமியாழ் கண்ணகையின் தவமேற்றிப் பெற்றார்

இளங்கோவின் கானல்வரி இன்னிசையைக் கேட்டும்
 இனிதன்னை கண்ணகையாள் வழக்கோசை கேட்டும்
களமார்ந்த ஆற்றிடையே மதுமாந்தித் துள்ளும்
 கலையிசையில் மீன்பாடக் காதாரக் கேட்டம்
களம்பொலியும் பாடல்களும் காவியமும் சிந்தும்
 கட்டுடலார் கூத்தகளும் மெட்டினிய வசந்தமுடன்
உளம் படிய கேட்டதனால் இசைத்தேனில் யாழிசைத்தோன்
 உலது புகழ் விபுலமணி உயிர்ப்புற்றார் இம்மண்ணில்

ஊராலும் கண்ணகையாள் ஊர்மகளாய் பிறந்து
 உதரத்தில் இம்மகனை தாங்கிடவே வந்தாள்
காராளர் குடிவாழ காரேறு மண்ணாள
 காளையவன் சாமித்தம்பி தன்கரத்தைப் பற்றி
பாராள பைந்தமிழில் பேராள பல்துறையில் வித்தான
 பத்தினியின் உருவுடையாள் பரிவுடனே ஈன்றளித்தாள்
ஏராளும் காரேறு மூதூராள் மாந்தர் குலம்
 இத்தவத்தோன் வருகையினால் இதயமுறக களித்தார்த்தார்

திருமகன் திருப்பெயரை சிந்தையுற வைத்தார்
 செழுமுழவர் வாழ்பதியான் செழுந்தமிழை உழுதான்
பெருநூல்கள் பலகற்று பேரறிவு பெற்றான்
 பேருலகம் வியந்திடவே பேருரைகள் செய்தான்
கருமபிணி அழிந்திடவே காளிமகள் வழிதேடி
 காவியுடை ஏற்று மட்டூர் கதிரொளியாய் வந்தான்
பெரும்பணிகள் யாவையுமே பீடுறவே ஆற்றி
 பெருந்தமிழர் தலைநிமிர வழிகண்ட தவமுனிவன்

அண்ணாமலைக் கழகத்தே அருந்தமிழன் தனிமுதல்வன்
 அறிவார்ந்த கடலுக்குள் மூழ்கியெழு முக்குளித்தொன்
தன்னார்ந்த ஈழமணி தனிநாட்டக் கழகத்தே
 தமிழ்த்துறையின் தலைவனென முதல்தகைமை பெற்றமுனி
மண்ணார்ந்த தாய்மண்ணின் மணிமகுடம் சூட்டிடவே
 மனமார்ந்த கலைக்கோயில் மாளிகைகள் தானமைத்தான்
பண்ணார்ந்த இசையாழில் பலதுறைகள் தானீர்ந்து
 பாரினிலே யாழ்நூலை பக்குவமாய் தான் படைத்தான்

தாய் மண்ணாம் காரேறு பதியாளு சந்ததிகள்
 தவமகனை உவந்தேற்றி தாய் அன்பு காட்டிடவே
சேய்மக்கள் யாவருமே சேர்ந்தொன்றாய் சிந்தையுற
 சிறப்பான நற்பணியில் செம்மை நலம் கண்டார்கள்
தாய் அன்பின் மூதூரன் தவமுனிவ முத்தமிட்டார்
 சந்ததிகள் உன்நினைவில் சந்ததமும் உருகுகின்றார்
தாய் மண்ணின் தலைவாசல் தவமகனே திருவுற்றாய்
 தமிழாகி வைத்தார்கள் தமிழன்னை பெருமையுற

காரேறு மூதூர் காவியமாய் ஆனவனே
 கண்ணகையாள் பெற்றெடுத்த தமிழாழும் மன்னவனே
காரேறு மூதூரார் கணப்பொழுதும் மறவார்கள்
 கண்மணியே உந்தனையே காதலுறப் பணிகின்றார்
காரேறு மூதூர் கண்ணியத்தின் புண்ணியனே
 காவியமாய் நிலைபெற்று ஓவியமாய் உருவுற்றாய்
காரேறு மூதூர் காவித்தாய் கண்பார்த்தாள்
 களம் பொலியும் நெல் மணியும் கலகலத்து இசைகூட்டும்

வேப்பமரத்தடியில் வித்தாகியாள் வந்திருந்து
 வித்திட்டார் உன்னிடத்தில் வித்தானாய் வித்தகனே
வேப்பமர நிழல்கனிந்த வீரசக்திப த்தினியாள்
 வித்திட்ட காரணத்தால் விபுலமென விளக்கானாய்
தீப்பாலும் செந்தேனும் தித்தித்து கனிவதுபோல்
 தீந்தமிழும் இசையமுதும் தித்தத்துள் இனித்ததுவே
சாம்போதும் தமிழோடும் உயிர்கலந்த உயிராளா
 தத்தவத்தின் வித்தகனே முத்தமிழின் பெருந்தலைவா

சித்திரா பூரணையில் சித்தமுறும் வேட்கையினால்
 சிவானந்த மாமுனிவ திருக்கரத்தால் துறவுற்று
சித்தமெலாம் ஞானத்தோன் தித்திக்கப் பொலிந்தவனே
 ஸ்ரீ ராமக்கிருஷ்ணர் பத் சிரமேற் படிந்தவனே
கத்துகடல் சூழ்காரை கலங்கரையின் ஒளிவிளக்கெ
 கற்பகமாய் அற்புதமாய் கண்மணியாய் உதித்வனே

நிலையாகி எம்நெஞ்சில் சிலையானாய் இம்மண்ணி;ல்
 நிறைதவத்தால் நெகழ்வுற்ற நின்நிலமே மகிழ்ந்தாட
கலையாகி எங்கும் காவியமாய் படிகின்றாய்
 கண்காணா யாழ்தன்னை காலத்தே பண்படைத்தாய்
மலையான இமயத்தே மாத்தமிழை விதைத்திட்டு
 மண்ணுலகம் எங்கினுமே அமரநிலை அடைந்தவனே
சிலம்பரசி திருமங்கை சீர்பெற்ற மூதூரில்
 திருவடிவாய் படிகத்தில் படிந்தினிது பார்த்தருளெ

வாழ்க நிதம் நற்பணிகள் வளர்க நல் நாடெல்லாம்
 வாஞ்சையுறும் நெஞ்சுடையார் வாழ்வெல்லாம் இனிக்கட்டும்
ஆழ்கநிதம் பேரறிவு அகமெலாம் உருகும் அன்பு
 அருள்கனிந்து தெய்வமெலாம் அருளாட்சி புரியட்டும்
நீழ்க ம்டூர் மண்வளங்கள் நிறைமழைகள் குளிர் பரவ
 நெற்களனி பொலிந்தெங்கும் பலபயிhகள் பசுமையுற
சூழ்க எங்கும் தூய்மை நலம் துலங்குதமிழ் இலங்கட்டும்
 சுடராகி விபுலமணி துணையாழ்வார் எம்மவர்க்கு

குறித்த பாமாலையும் சுவாமி விபுலானந்த அடிகளார் தமிழ் அர்ச்சனை அடங்கிய 108 சுலோகமும் நூல் வடிவில் விரைவில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.