மண்டூர்,வெல்லாவெளி வீதியில் உள்ள பாலத்தின் கட்டுமானப்பணியில் குறைபாடுகள் ஏன்?

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட அம்பிளாந்துறை வீரமுனை  வீதியில் உள்ள 11/4 இலக்கமுடைய பாலத்தின் திருத்த வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு நிறைவுடையும் நிலையில் உள்ளது.

அதாவது 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கில் மேற்குறிப்பிடப்பட்ட பாலமான வெல்ளைப்பாலம் திடீர் என்று உடைந்து விழுந்திருந்தது.இந்த  பாலத்தின் திருத்த வேலைககைள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன ஆனால் கார்த்திகை,மார்கழி ஆகிய இரண்டு மாதகாலங்களும் கிழக்கில் அதிகமாக  மழைவீழ்ச்சி பதிவாகின்ற காலம். அக்காலப்பகுதியில் இந்த  பாலத்தின் திருத்தவேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை பெருத்தமற்றது என்பது மக்களின் கருத்து.

இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.இருந்தும் இந்தப்பாலத்தின் கட்டுமானப்பணிகளில் பல குறைபாடுகள் நடைபெறுவதாக வீதிப்போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்களினால் அவதானிக்கப்படுகின்றது. குறிப்பாக ஏற்கனவே இருந்த தற்காலிகபாலம் கழற்றப்பட்டு அதேபாலத்தின் அருகாமையில் ஏற்கனவே இருந்த கல்,அதற்கான கல்அடுக்கும் கூடுகள் என்பவற்றை பாவித்துள்ளனர்.ஆனால் புதிய பால கட்டுமானபணிகள் அமைத்தது போன்று வேலைகள் நடைபெறுகின்றன.அத்தோடு மிகமுக்கியமான நடைபெற்ற வேலைகளில் இந்தப்பாலத்தின் அத்திவாரம் மூலம் உருவாக்கப்பட்ட இரண்டு தூண்களில் ஒன்று ஒருபக்கமாக சாய்ந்த நிலையில் காணப்படுகின்றது.

அத்தோடு பாலத்தின் முன்பாக உள்ள வீதியின் இருமருங்கிலும் கற்கள் அடுக்கப்படும் கம்பிக்கூடுகள் மற்றும் கற்கள் என்பன கழற்றப்பட்ட பழைய பாலத்திலிருந்து அகற்றப்பட்ட பொருட்களையே உபயோகப்படுத்துகின்றனர். அத்தோடு பாலத்தின்  கட்டுமானப்பணிகளுக்காக வெளியேற்றப்பட்ட மண்ணையே மீளவும் பயன்படுத்திக்கொண்டுவருகின்றனர்.

எமது பிரதேசங்களில் பாலங்களின் கட்டுமானப்பணி என்பது வீதிப்போக்குவரத்தில் பொதுமக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தி எதிர்கால சந்ததியினருக்கு நீண்டகாலங்கள் பாவனைப்டுத்துவதே புதிய பாலங்களின் கட்டுமானப்பணியின் நோக்கம் அல்லவா?.பல காலங்களாக வெல்லாவெளி மண்டூர் வீதியும் மக்களின் அவலங்கள் பற்றியும் உரிய அதிகாரிகளுக்கு பத்திரிகை,இணையத்தளங்கள் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தும் ஏன் இந்த பாலத்தின் கட்டுமானப்பணிகளில் பாரிய மாற்றங்கள் இடம் பெறுகின்றன இது வீதி அபிவிருத்தி அதிகார சபையின்  பொறியியலாளர்களின் தவறா அல்லது இந்தப்பாலத்தின் ஒப்பந்தக்காரர்களின் தவறுகளா யார் பொறுப்புக்கூறுவது?