மூவர் வெட்டிப் படுகொலை சம்பவம் தொடர்பாக குடும்பத்தலைவன் கைது


(வரதன்)
 மட்டக்களப்பு, வெல்லாவளி காக்காச்சிவெட்டை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் குடும்பத்தலைவன் கைது செய்யப்பட்டுள்ளார். 


இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காக்காச்சிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (வயது 18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோரே கொல்லப்பட்டவர்களாளவர். 

மனைவியும் குழந்தையும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் சனிக்கிழமை நள்ளிரவைத் தாண்டி சற்று நேரத்தில் எங்கிருந்தோ வந்து வீட்டிற்குள் புகுந்த விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் ) விஜித்தாவையும் அவரது ஒன்றரை வயதுக் குழந்தையையும் வெட்டிக் கொலை செய்து வீட்டுக் கிணற்றில் வீசியுள்ளார். 

இவ்வேளையில் அயல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த விஜித்தாவின் தந்தையான பேரின்பம் தனது மகள் விஜித்தாவினதும் பேரக்குழந்தையான சஸ்னிகாவினதும் அவலக் குரல் கேட்டு ஓடிவந்த பொழுது கொலையாளியான மருமகனான பிரசாந்தன் மாமனாரையும் தாக்கியுள்ளார். 

வெட்டப்பட்ட விஜித்தாவின் தந்தை பேரின்பம் காயங்களோடு குற்றுயிராகக் கிடந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று ஞாயிறு காலை மரணமடைந்துள்ளார். 

சம்பவத்தில் ஈடுபட்டவர் அக்குடும்பத்தின் தலைவன் என்பதை ஆரம்பக் கட்ட விசாரணைகளின் மூலம் அறிந்து கொண்ட பொலிஸார் காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் மறைந்திருந்தபோது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். 

கணவனுக்கும் மனைவிக்குமிடையில் நீண்ட நாட்களாக இருந்துவந்த குடும்பத் தகராறே இந்தப் படுகொலைக்குக் காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.