மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பாற்குட பவனி

அக்கரைப்பற்று அருள்மிகு மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் நான்காம்நாள் திருவிழாவின் விசேட சங்காபிஷேகப் பூஜைகளைச் சிறப்பிக்கும்வகையில் இன்று (30) காலை இடம்பெற்ற பாற்குட பவனியானது ஆலையடிவேம்பு பிரதேச செயலக அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி நாதஸ்வரம், தவில் வாத்திய இசை முழங்க மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தைச் சென்றடைந்தது.

அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பிருந்துஜன் சர்மாவினால் முன்னெடுக்கப்பட்ட சமய சம்பிரதாயச் சடங்குகளோடு இடம்பெற்ற குறித்த பாற்குட பவனியை ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் செயலாளரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தருமான ஆறுமுகம் சசீந்திரன் மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய அறங்காவலர் சபை அங்கத்தவர்களோடு இணைந்து அடியவர்களுக்குப் பசும்பாலைப் பகிர்ந்தளித்து ஆரம்பித்துவைத்தார்.

அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமாகி வாழைமரத் தோரணங்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த சாகாம வீதியூடாகச் சென்று அக்கரைப்பற்று நகரின் மணிக்கூண்டுக் கோபுரச் சந்தியில் திரும்பி, பொத்துவில் வீதியூடாக மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தைச் சென்றடைந்த குறித்த பால்குட பவனியில் உமை மைந்தருள் முதல் மைந்தனாம் வேழமுகத்து விநாயகனின் அடியவர்கள் சுமார் நூறுபேருக்கு மேல் இணைந்துகொண்டிருந்தமை அங்கு தெய்வீக மணம்பரப்பும் அழகிய கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது.

கடந்த 27-08-2016 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் இவ்வருடத்துக்கான வருடாந்த மஹோற்சவமானது தொடர்ச்சியாகப் பத்து நாட்கள் திருவிழாவாக இடம்பெற்று, எதிர்வரும் 05-09-2016 திங்கட்கிழமை இடம்பெறவுள்ள தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளதுடன், 06-09-2016 அன்று பூங்காவனத் திருவிழாவும், மறுநாள் 07-09-2016 அன்று வைரவர் பூஜையும் ஆலயத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.