வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள ஊடகவியலாளர்களுக்கான விளக்கமளிக்கும் கூட்டம்

(எஸ்.சதீஸ்)
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடகப் பிரிவில் இணைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச ஊடகவியலாளர்களுக்கான விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று 30ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் பி.குணரெட்ணம் தலைமையில் மேற்படி கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது பணிப்பாளர் பி.குணரெட்ணம் தெரிவிக்கையில்,

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், திணைக்களத்தின் நிகழ்வுகள் உள்ளிட்ட தகவல்களை உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று முழு இலங்கைக்கும் வௌிப்படுத்துவதுடன் வறிய மக்களின் வாழ்வாதார  மேம்பாட்டுக்காகவும் இத் திணைக்கள ஊடகவியலாளர்கள் கடமையாற்ற வேண்டும்.

தலைமையக அலுவலகத்தில் எமக்கென பத்திரிகை, இணையத்தளம் போன்ற ஊடகங்கள் உள்ளன. இவ் ஊடகப் பிரிவினை மாவட்ட ரீதியில் எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கம் செய்ய திணைக்களத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது. 

இப் பிரிவு வறிய மக்களின் மேம்பாட்டுக்காக உழைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுகப் பாதுகாப்பு நிதியினை வழங்குவதால் அப் பயனாளிகள் பெரும் நன்மையடைகின்றனர். நாம் மக்களுக்கு வழங்கும் உதவிகள்போல் பொரும்பாலும் வேறு எந்த திணைக்களமும் வழங்குவதில்லை. 

வங்கிக்கடன், வாழ்வாதார மேம்பாட்டுக்கான சுயதொழில் உதவி, மாணவர்களுக்கான புலமைப் பரிசில், நிவாரணக் கொடுப்பனவு, சமுக அபிவிருத்திப் பிரிவின் விஷேட உதவிகள், வீடமைப்பு திட்டம் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை எமது திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

இதில், சமுகப் பாதுகாப்பு நிதி வழங்கலில் பயனாளிகளுக்கு மரணக் கொடுப்பனவினை கூடியவரை விரைவாக பெற்றுக்கொடுக்க உரிய உத்தியோகத்தர்கள் நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும்.  என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக வாழ்வின் எழுச்சி தலைமையக முகாமையாளர் எவ்.மனோகிதராஜ் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.