ஆலையடிவேம்பு பிரதேச முன்பள்ளி ஆசிரியைகளும் பெற்றோரும் பங்குபெற்ற போஷாக்கு வழிகாட்டல் கருத்தரங்கு

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் சிறுவர் செயலகத்தின் போஷாக்கு வழிகாட்டல் கருத்திட்டத்துக்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்கொன்று இன்று (25) காலை ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் பணிமனையில் இடம்பெற்றது.

முன்பிள்ளைப்பருவ சிறார்களின் போஷாக்கு மேம்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த வழிகாட்டல் கருத்தரங்கில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இயங்கிவரும் 26 பதிவுசெய்யப்பட்ட பாலர் பாடசாலைகளின் ஆசிரியைகள் பங்கெடுத்ததுடன், அதனோடு இணைந்தவகையில் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பங்குபற்றிய இளஞ்சிறார்களுக்கான போஷாக்குணவுகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையேற்று நடாத்திய குறித்த நிகழ்வுகளில் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் அக்கரைப்பற்று பிராந்திய அலுவலக முகாமைத்துவ உதவியாளர் பி.மோகனதாஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பிரதேச செயலாளரது தலைமையுரையினைத் தொடர்ந்து போஷாக்குக் குறிகாட்டிகளை அளவிடுவதற்கான பிரயோகரீதியான நடைமுறைகளை மேற்கொள்ளும் முறைகள் தொடர்பாகவும், பிள்ளைகளின் வயதுக்கேற்ற உயரம் மற்றும் நிறை என்பவற்றைத் தொடர்ச்சியாகப் பேணுதல் தொடர்பாகவும் தெளிவூட்டும் கருத்துக்களை ஆலையடிவேம்பு பதில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி. பரூஸா நக்பர் அங்கு முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு முன்பிள்ளைப்பருவ சிறார்களுக்குக் கொடுக்கின்ற இலகுவில் வீட்டில் தயாரிக்கக்கூடிய போஷாக்குமிக்க நிறையுணவுகள் தொடர்பாக பிரயோகரீதியான உதாரணங்களுடன் காரைதீவு பிராந்திய பொதுச் சுகாதார தாதிய சகோதரி திருமதி. கிரிஜா இராஜேஸ்வரன் முன்பள்ளி ஆசிரியைகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

அடுத்து பெற்றோர்களுக்காக நடாத்தப்பட்ட தனிநபர் மற்றும் வாய்ச் சுகாதாரம் ஆகியவற்றோடு இணைந்த தொற்றுநோய்கள் தொடர்பாக இடம்பெற்ற அறிவூட்டல் கருத்தரங்கை மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.மகேஸ்வரன் முன்னெடுத்தார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உத்தியோகத்தர்களால் தயாரிக்கப்பட்ட போஷணை உணவுகள் அங்கு காலை உணவாக சிறார்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் நிகழ்வுகளின் இறுதியில் அவர்களுக்கு இனிப்புகளும் வழங்கிவைக்கப்பட்டன.