அக்கரைப்பற்றில் இப்படியும் நடக்கிறதா?

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி வலையமைப்பு சேவைகளை மக்களுக்கு வழங்கிவருகின்ற எடிசலாட் நிறுவனத்தினால் அண்மைக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உடனடிப் பரிசுகளையும், மீள்நிரப்பும் அட்டைகளின் பெறுமதிகளுக்கமைய புள்ளிகளை வழங்கி மாதாந்தச் சீட்டிழுப்புக்கள் மூலம் பெறுமதிமிக்க மாபெரும் பரிசுகளையும் வழங்கும் ‘சூரூ’ பரிசுத்திட்டத்தில் வெற்றிபெறுகின்ற வாடிக்கையாளர்கள் தொடர்பான விபரங்கள் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களூடாக அவ்வப்போது பகிரங்கப்படுத்தப்பட்டுவருகின்றன. இதில் தாம் கொள்வனவு செய்யும் மீள்நிரப்பும் அட்டைகள் மூலம் உடனடிப் பரிசுகளை வெல்லும் வாடிக்கையாளர்கள் அவ்வட்டைகளின் விற்பனை முகவர்களினூடாகவும், வாடிக்கையாளர் சேவை உத்தியோகத்தர்களூடாகவும் எடிசலாட் நிறுவனத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு தமக்கான பரிசுகளைப் பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் குறித்த மீள்நிரப்பும் அட்டைகளை விற்பனை செய்வதில் பாரிய மோசடியொன்று இடம்பெற்றுவருவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அத்தோடு மிகவும் நூதனமான முறையில் இம்மோசடி அரங்கேறிவருவதை அவதானிக்கக்கூடியதாகவும் உள்ளது.

இன்று (23) காலை அக்கரைப்பற்று, பொத்துவில் வீதியிலுள்ள பொதுச்சந்தையில் தனது இன்றைய உணவுத்தேவைக்கான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகச் சென்றிருந்த பொதுமகன் ஒருவர் அங்கிருந்த பலசரக்குக் கடையொன்றில் 100 ரூபாய்க்கான எடிசலாட் மீள்நிரப்பும் அட்டையொன்றை வாங்கமுயன்றபோது தங்களிடம் 50 ரூபாய் பெறுமதியான அட்டைகளே கைவசம் இருப்பதாகக் கூறி அவற்றில் இரண்டை வழங்கியுள்ளனர். தனது கைத்தொலைபேசிக்கு மீள்நிரப்பும் நோக்கோடு அவற்றைச் சுரண்ட எத்தனித்த அந்தப் பொதுமகன் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் இரகசிய இலக்கங்கள் காணப்படுகின்ற இடத்துக்குக் கீழுள்ள பரிசுகளை வெல்லும் கூடானது ஆங்காங்கே சுரண்டப்பட்டு உள்ளே மறைந்திருக்கின்ற பரிசு தொடர்பான விபரம் அரைகுறையாக வெளியே தெரியக்கூடியவாறு அவ்விரு அட்டைகளும் காட்சியளித்துள்ளன. ‘சூரூ’ பரிசுத்திட்டத்தின் நிபந்தனைகளின்படி பரிசுக்கூட்டிலுள்ள ஒரு பொருள் மூன்று தடவை குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை உடனடிப் பரிசாக வாடிக்கையாளரால் வென்றெடுக்கமுடியும். ஆயினும் குறித்த பொதுமகனுக்கு வழங்கப்பட்ட மீள்நிரப்பும் அட்டைகளில் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் உருவமும், மற்றைய அட்டையில் LED தொலைக்காட்சியின் உருவங்கள் இரண்டும் தெளிவாகத் தெரியும்படி இருந்துள்ளன. இதனால் அவற்றைச் சுரண்டும் முன்னரே அவையிரண்டும் எந்தப் பரிசையும் வெல்லமுடியாத அட்டைகள் என்பதை அவர் தெரிந்துகொண்டுள்ளார். எனவே இதுகுறித்து உடனடியாக கடைக்காரரிடம் அறிவித்துள்ளார்.

எனினும் கடைக்காரரோ எமக்கு எடிசலாட் நிறுவன முகவரால் விற்பனைக்காகத் தரப்பட்ட மீள்நிரப்பும் அட்டைகளெல்லாம் அவ்வாறே காணப்படுவதாகவும், நீங்கள் இதுகுறித்து முறைப்பாடு செய்வதென்றால் 1727 இலக்கத்துக்கு அழைக்குமாறும் கூறி தனது நேரத்தை வீணாக்கவேண்டாமென அப்பொதுமகனைக் கடிந்துகொண்டதோடு, அவற்றுக்குப் பதிலாக சுரண்டப்படாத வேறு அட்டைகளையும் வழங்கமறுத்துள்ளார்.

தனக்கு நேர்ந்த அநீதி குறித்து பற்றி நியூஸுக்குக் கருத்துத் தெரிவித்த குறித்த நபர், தான் அறிந்தவரையில் சில தினங்களுக்கு முன்னர் குறித்த வியாபார நிலையத்திலிருந்து விற்பனை செய்யப்பட்ட எடிசலாட் மீள்நிரப்பும் அட்டையொன்றின் மூலம் சகோதர இனத்தவர் ஒருவர் LED தொலைக்காட்சி ஒன்றை உடனடிப் பரிசாகப் பெற்றுக்கொண்டதாகத் தான் சற்றுமுன்னர் அறிந்ததாகவும், அவ்வாறான பரிசுகளை வாடிக்கையாளர்கள் பெறுவதைத் தடுப்பதன்மூலம் தான் பெற்றுக்கொள்ளலாம் என்ற பேராசை காரணமாகவே குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளர் இவ்வாறான மோசடியில் ஈடுபட்டுவருவதாகவும் குறிப்பிட்டதோடு, இவ்வாறன விடயங்கள் அக்கரைப்பற்றில் பல தனியார் தொலைத்தொடர்பு நிலையங்களில் பரவலாக இடம்பெற்றுவருவதாகவும் குறிப்பிட்டார். வீண் அசௌகரியங்களைத் தவிர்க்கும்பொருட்டு இணையத்தில் தனது பெயரை வெளியிடவேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

இச்செய்தியை உறுதிசெய்துகொள்ளும் நோக்கில் எமது இணையத்தளத்தினால் எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் இதுவரை பயனளிக்கவில்லை.