கல்லடி பிரதேசத்தில் இரவிலும்,பகலிலும் அநாகரிகமான முறையில் நடந்துகொள்ளும் மர்மநபர்கள்

(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்லடியில்    6745 குடும்பங்களைக் கொண்ட 18648 பொதுமக்கள் வாழ்கின்றார்கள்.

இங்கு வாழும் குடும்பத் தலைவர்கள் அல்லது தலைவிகள் தங்களின் தொழிலையும்,கடமைகளையும்  சிறப்பான முறையில் செய்து குடும்பத்தை வளப்படுத்திக் கொள்கின்றார்கள்.  தங்களின் வாழ்க்கையும் தொழிலுமாகத்தான் செயற்படுகின்றார்கள்.


இங்கு இருப்பவர்களின் அல்லது வாழ்பவர்களின் கணவர்மார் மாவட்டத்தை விட்டு தூரஇடங்களில் குறிப்பாக திருகோணமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மலையகம், வெளிநாடுகள் போன்றவற்றில் வாழ்கின்றார்கள்.இவர்களில் பலர் மாதலீவு,அரையாண்டுலீவு, வருடாந்தலீவு எடுத்தும் மற்றும் விஷேடதினங்களில் தான் வீட்டுக்கு வந்து போகின்றார்கள். குடும்பத்தலைவி தனது பிள்ளைகளை வைத்து சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றார்கள். சிலவீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வளர்ந்த பிள்ளைகளும் இருக்கின்றார்கள்.


இப்படிப்பட்டவர்களின் விபரங்களையும்,இரவில் வீடுகளில் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பது பற்றியும்,பெண்பிள்ளைகளின் நிலைபாட்டையும் அறிந்து வைத்து சில இளைஞர்கள், மர்மநபர்கள், கினிநோயாளர்கள், அல்லும்பகலும் செயற்படும் பெண்நோயாளர்கள்,  அவர்களின் வீட்டுவளவுக்குள் உள்நுழைந்து உடுப்பு காயவைக்கும்(உலரவைத்தல்) கொடிகளில் காணப்படும் குடும்பத்தலைவிகளினதும்,பெண்பிள்ளைகளினதும் உள்ளாடைகள், மேலாடைகள், போர்வைகள் போன்றவற்றை சூட்சுமமான முறையில் எடுத்துச்செல்கின்றார்கள்.

விடிந்தவுடன் வேலைக்குச் செல்வதற்கும், பாடசாலைக்குச்செல்வதற்கும் அவசரமாக கடமைகளை முடித்துவிட்டு உடுப்புக்கொடியில் தங்களின் ஆடைகளை தேடினால் முதல் நாள் காயப்போட்ட ஆடைகள் காணாமல் போகின்றது. இதனால் கதிகலங்கி அவமானப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள்,மாணவிகள்   கவலை தெரிவிக்கின்றார்கள். எடுத்துச்செல்லும் உள்ளாடைகளை வைத்து பூசாரியை வைத்து பில்லிசூனியம் செய்து காமுகர்கள் தங்களையும், தங்களின் வளர்ந்த பிள்ளைகளையும் இவர்களுக்குப்பின்னால் அலைய வைப்பார்களோ...? எனத் ஏங்கித் தவிக்கின்றார்கள்.

இச்சம்பவங்கள் வீடுகளிலும், சுவாமி விபுலானந்தா இசைநடனக்கல்லூரி அருகிலும் ,  சிறுவர் இல்லங்களிலும் நடைபெறுகின்றது. அண்மையில் உள்ளாடைகள் திருட்டு பற்றி சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் முறைப்பாடு செய்த போது அவரை விசாரித்து அவரை பின் தொடர்ந்த போது அவரின் ரகசிய இடத்தில் ஒருமூடை உள்ளாடைகள் மீட்கப்பட்டது. இவ்வாறு கல்லடிகொலணியில் மீட்கப்பட்டது.

இன்னும் சிலர் மற்றவர்களின் வளவுக்குள் மாடியில்இருந்தும், தடுப்புச்சுவருக்கு மேலாகவும்,மதிலில் ஓட்டையைப்போட்டும் , பெண்களை     அநாகரியமான முறையில் பார்க்கின்றார்கள். இன்னும்சிலர் பட்டப்பகலில் அவர்களின் தடுப்புச்சுவரில் சலம் கழித்துச் செல்கின்றார்கள். இன்னும் சிலர் தங்களின் வீட்டுக்கழிவுகளையும், பெண்களின் கழிவகற்றிகளையும், கோழிக்கழிவுகளையும், மீன், இறால், நண்டு, கணவாய்க்கழிவுகளையும் ஆண்கள் நடமாட்டம் குறைந்த வீடுகளில், பகலிலும் இரவிலும் வீசிவருகின்றார்கள். இன்னும் சிலர் தாங்கள் பாவித்த சாராயப்போத்தல்கள், பியர்ரின்களையும் பரம்பரை பரம்பரையாக குடிக்காத வீடுகளை பார்த்து வீசிவருகின்றார்கள்.

காலையில் எழுந்தவுடன்  அருவருப்பாக இதனை கண்ணால் நோக்கவேண்டியுள்ளது. தங்களையும் சமூகத்தில் குடிகாரக் குடும்பமாக காட்டுவதற்கு சிந்தரிக்கும் கேவலமான செயற்பாடா...? எனக் இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அங்கலாய்க்கின்றார்கள்.

இன்னும் சில வேலையில்லாதவர்கள் காலைமுதல் இரவுவரையும் தங்களின் குடும்பத்தை கவனிக்காமல் மற்றவர்களின் குடும்பத்தின் மீதும்,வீடுகளில் இருக்கும் பெண்கள் மீதும் பழிசுமத்த வேண்டும் நோக்கில் வீட்டில் யார்யார் வேலை செய்கின்றார்கள், யார் வந்து போகின்றார்கள் என வேவு பார்த்து அவர்களை களங்கப்படுத்தும் நோக்கில் செயற்படுகின்றார்கள்.

ஆண்களே துணையில்லாத வீட்டில் பெண்களால் செய்யமுடியாத காரியங்களை மனிதபிமானம், இரக்கசிந்தனையுடன் இவர்களுக்கு  உதவிசெய்கின்றார்கள். இவர்களையும் பார்த்து கல்லடிப்பிரதேசத்தில் உள்ள ஊதாரிகள் மிகவும் சொல்லமுடியாத வார்த்தைகளால் அவமானப்படுத்தி வருகின்றார்கள். இவர்களுக்கு நிச்சயமாக இறைவனின் தண்டனைகள் தீர்ப்புக்கள் கிடைக்குமென பாதிக்கப்பட்ட பெண்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

இது பற்றி குடும்பதலைவி கருத்து தெரிவிக்கையில்:-எனது கணவர் திருகோணமலையில் வேலை செய்கின்றார். மூன்று மாதத்திற்கு ஒருதடவை தான் வீட்டுக்கு வந்து போகின்றார். எனது உடுப்புக்களையும்,பிள்ளைகளின் உடுப்புக்களையும் வேலைக்குப்போய் வந்து (ஓய்வாக இருக்கும்போது)  கழுவி உடுப்புக்கொடியில் காயப் போடுகின்றேன்.

இரவு எட்டுமணியுடன் பிள்ளைகளும் நானும் வீட்டுக்குள் வைத்து வெளியே செல்லாது பாதுகாப்புடன் வீட்டை மூடிவிடுகின்றோம். இந்தச்சம்பவம் எனக்கு மூன்று தடவைகள் நிகழ்ந்துள்ளது. கணவரிடம் உடுப்பு பற்றி கேட்டால் சண்டை ஏற்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் வீட்டு வளவுக்குள் இருக்கும் விற்க கூடியபொருட்கள் என்பவற்றையும் எடுத்துச்செல்கின்றார்கள்.சிலர் தூரஇடங்களுக்கும்,வங்கிகள்,அலுவலகங்களுக்கும்,வேறுவிடயங்களுக்கும் செல்லும்போது அத்தருணம் பார்த்து உடுப்புக்கள்,பொருட்கள் திருடப்படுகின்றது.

இன்னும் சில மர்மநபர்கள் பகலில் நகைகள் அணிந்து செல்பவர்களின் நகைகளை அபகரித்த சம்பவங்களும் உண்டு.நகைகளை அணிந்து செல்பவர்களை நோட்டமிட்டு இரவில் அவர்களின் வீட்டுக்குள் நுழைந்து நவீன மயக்க மருந்துகளை தெளித்து அவர்களின் நகைகளை அபகரிக்கவும் முயற்சிகளை மேற்கொள்வார்கள்.இது சம்பந்தமாக பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு பாதிக்கப்பட்ட குடும்பபெண்கள்,மாணவிகள்,பிள்ளைகள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.  இப்பிரதேசத்தில் பாடசாலைகள், ஆலயங்கள், ஆன்மீகசாலைகள்,மனிதர்களை வளப்படுத்துவதிலும்,ஆற்றுப்படுத்துவதிலும் பாரிய பங்காற்றி வருகின்றது. ஒருசிலர் விடும் பிழைகளால் ஊருக்கே அவமானம்.

சில சந்தேக நபர்கள் பற்றி கிராமத்தில் உள்ள ஆலயபரிபாலனசபையினர், கிராமஅபிவிருத்தி சங்கத்தினர், மகளிர்சங்கம், விளையாட்டுக்கழகம், சிவில்பாதுகாப்பு குழுக்கள், கவனமாகவும் செயற்படவேண்டும்.

பெண்களின்பாதுகாப்பு காலத்தின் தேவையாகவுள்ளது.